மும்பை தாக்குதல் வழக்கில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாஜக சார்பில் போட்டி

By செய்திப்பிரிவு

மும்பை தாக்குதல் வழக்கில் அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் பாஜக சார்பில், மும்பை வட மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் நேற்று வெளியிட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மும்பையில் தொடர் தாக்குதல் நடத்தினர். இதில் 20 ராணுவவீரர்கள், 26 வெளிநாட்டினர் உட்பட 174பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் பின்னர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம். இவர் மேலும் பல முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு மும்பை வட மத்திய தொகுதியில் உஜ்வல் நிகமை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இதன் மூலம், தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் என்பதை பாஜக உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த பிரமோத் மகாஜன்மகள் பூனம் மகாஜன் மும்பை வட மத்திய தொகுதியில் 2 முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு 3-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக.வை பொறுத்த வரையில் கட்சிதான் முக்கியம். எந்த ஒருதனிப்பட்ட நபரும் முக்கியமல்ல என்பதை மீண்டும் பாஜக உறுதி செய்வதாக உள்ளது என்கின்றனர்.

பாஜக சார்பில் போட்டியிடுவது குறித்துஉஜ்வல் நிகம் கூறும்போது, ‘‘இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் அரசியல் மூலம்நம்மால் சேவை செய்ய முடியும். நாட்டுக்குசேவை செய்ய கிடைத்த வாய்ப்பாக இதைகருதுகிறேன். அந்த வகையில் நான் அதிர்ஷ்டகாரன்’’ என்றார்.

மும்பை வட மத்திய தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பூனம் மகாஜன் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் எம்.பி.யாக பணியாற்ற வாய்ப்பளித்த பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளேன்’’ என்றார்.

மேலும், ‘‘என்னுடைய ரோல் மாடல் என்றால் அது என் தந்தை பிரமோத் மகாஜன்தான். அவர்தான், நாடுதான் முதலில், நாமெல்லாம் பிறகுதான் என்று வழிகாட்டினார். என் வாழ்நாள் முழுதும் அந்தப் பாதையில் பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்’’ என்று எக்ஸ் வலைதளத்தில் பூனம் மகாஜன் கூறியிருக்கிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE