குறைந்தபட்சக் கூலி சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு பரிசீலனை

By செய்திப்பிரிவு

‘குறைந்தபட்சக் கூலி சட்டம் - 1948’-ல் திருத்தம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், “இச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “1948-ம் ஆண்டின் குறைந்தபட்சக் கூலி சட்டத்தின் படி மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட துறைகளில் தொழிலாளர்களுக் கான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கவும் பரிசீலிக்கவும் மாற்றியமைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளன.

மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கூலித் தொகை, அதன் அதிகார வரம்புக்குட்பட்ட ரயில்வே நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள், நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்” என்றார்.

மற்றொரு கேள்விக்கு தோமர் அளித்துள்ள பதிலில், “2014, ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, நாட்டின் பல்வேறு மாநிலங் களில் 56 லட்சத்து 90 ஆயிரத்து 636 பீடித் தொழிலாளர்கள் உள்ளனர்.

பீடித் தொழிலாளர்களின் வெவ்வேறு நோய்களுக்கான பல்வேறு மருத்துவ திட்டங்களின் கீழ் 2013-14-ம் ஆண்டில் 31,74,440 பேர் பயனடைந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் கல்வித் திட்டங்களின் கீழ் 4,96,416 பேரும், குழு காப்பீடு திட்டத்தின் கீழ் 7,02,320 பேரும் பயனடைந்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE