வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக பிஎஃப்ஐ-க்கு காங்., ஆதரவளிக்கிறது: பிரதமர் மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

பெலகாவி: கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பிஎஃப்ஐ-க்கு ஆதரவு அளித்தது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி, இந்தியாவின் ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை அவமதிக்கிறார். ஆனால், தனது சமரச அரசியலுக்காக நவாப்புகள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாகளின் அடாவடிகள் குறித்து அமைதி காக்கிறார்” என்றும் பிரதமர் சாடியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: மக்களின் சொத்துக்களை அதிகரிக்க பாஜக வேலை செய்கிறது. ஆனால் காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) மற்றும் அவரது சகோதரி (பிரியங்கா காந்தி) இருவரும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததால் நாட்டினை எக்ஸ்ரே செய்யவோம் என்று அறிவிக்கிறார்கள்.

அவர்கள் உங்களின் சொத்துகள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் ஆபரணங்கள், தங்கம், தாலி ஆகியவைகளையும் சோதனை செய்வார்கள். அவர்கள் உங்கள் வீடுகளை சோதனை செய்து சொத்துக்களை அபகரிப்பார்கள். அப்படி கைப்பற்றிய பின்னர் சொத்துகளை மறுபங்கீடு செய்வதைப் பற்றி பேசுகிறார்கள். அதனை தங்களின் அன்புக்குரிய வாக்குவங்கிக்கு பிரித்துக்கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் இந்த ஊழலை அனுமதிப்பீர்களா? நான் காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இந்த எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள். நான் உயிரோடு இருக்கும் வரை இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

நமது வரலாறு மற்று சுதந்திர போராட்டங்களை சமரசம் மற்றும் வாக்கு வங்கியின் கண்கொண்டே காங்கிரஸ் எழுதியுள்ளது. இன்றும் கூட, காங்கிரஸின் இளவரசர் அந்தப் பாவத்தை முன்னெடுக்கிறார். அவரின் சமீபத்திய அறிக்கைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பாரதத்தின் ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை அவர் அடக்குமுறையாளர் என்கிறார்.

அவர்கள் (ராஜா மற்றும் மகாராஜாக்களை) ஏழை மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சத்திரபதி சிவாஜி மகராஜா மற்றும் கிட்டூர் ராணி சன்னம்மா போன்ற சிறந்த ஆளுமைகளை காங்கிரஸ் இளவரசர் அவமதித்துள்ளார். அவர்களின் ஆளுமைகள் இன்றும் நமக்கு ஊக்கம் அளிக்கின்றன. காங்கிரஸ் இளவரசரின் அறிக்கைகள் உள்நோக்கம் கொண்டவை. சமரச அரசியில், வாக்கு வங்கி அரசியலை நோக்கமாக கொண்டவை.

ராஜாக்கள், மகாராஜாக்களை பற்றி குறை கூறும் இளவரசரின் வாய், இந்திய வரலாற்றில் நவாப்புகள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களின் அநியாயங்களை பற்றி மவுனம் காக்கிறது. அவைகள் குறித்து வாய்மூடி மவுனிக்கும் ராகுல் காந்தி ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை பற்றி அவதூறு பேசுகிறார்.

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் அநியாயங்களை ராகுல் காந்தியால் நினைவு கூறமுடியாது. அவுரங்கசீப் நமது பல கோயில்களை அசுத்தப்படுத்தி அழித்தார். அவுரங்கசீப்பை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

பரோடா மகாராஜா தான் அம்பேத்கரின் திறமையை முதலில் அடையாளம் காட்டினார். காங்கிரஸ் இளவரசர் ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களின் பங்களிப்பினை நினைவுகூரமாட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக ராஜாக்களுக்கு எதிராக பேச துணிவிருக்கும் அவர்களுக்கு நவாப்புகள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களுக்கு எதிராக பேச பலம் இருப்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் சமரச மனநிலை நாட்டு மக்களின் முன் வெளிவந்துவிட்டது. அதேநேரத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது. அவர்களைப் பொறுத்தவரை நேஹா போன்ற மகள்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை. பெங்களூரு கபேவில் குண்டு வெடித்ததும் காங்கிரஸ் அரசு முதலில் அதில் அக்கறை காட்டவில்லை. சிலிண்டர் வெடித்துவிட்டதாகவே முதலில் சொன்னார்கள். நீங்கள் (காங்கிரஸ்) ஏன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்களால் முடியவில்லை என்றால் வெளியேறி வீட்டுக்குச் செல்லுங்கள்.

வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்ட தீவிரவாதத்தை ஆதரிக்கும் தேசவிரோத அமைப்பான பிஎஃப்ஐ-யின் ஆதரவைப் பெற்றது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அவர்களிடம் சரணடைவீர்களா? பாஜக பிஎஃப்ஐ-யைத் தடை செய்தது, அதன் தலைவர்களைச் சிறையில் தள்ளியது.

பரம்பரை சொத்து வரி என்ற ஆபத்தான திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வர உள்ளது. அவர்கள் (காங்கிரஸ்) சொல்கிறார்கள் உங்கள் குழந்தைகளுக்காக சேமித்ததை நீங்கள் அவர்களுக்குத் தரமுடியாது. அப்படித் தர நினைத்தால் அதற்கு 55 சதவீதம் வரி செலுத்த வேண்டும். தங்களின் வாக்கு வங்கிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக அவர்கள் உங்களின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்