தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதி விடுவிப்பு: தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக 115 புள்ளி 49 கோடி ரூபாயும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக 160 புள்ளி 61 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு 3,454 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
“தமிழகத்துக்கு நிதியும், நீதியும் கிடையாது!”: முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழகம் கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
» மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை அலர்ட்!
» விழுப்புரத்தில் பானையை தவிர்த்து தண்ணீர் பந்தல் அமைத்த அதிமுகவினர்!
“கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததில்லை” - இபிஎஸ்: “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை 7 ஆயிரம் கோடி ரூபாய்தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
“கேட்ட நிவாரண நிதியை ஒதுக்க பாஜக அரசு மறுத்தது தெளிவு”: “தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். மேலும், “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை: மே 1-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை, இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் ஆதரவு ஆயுதக் குழு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
“அடுத்த கட்ட தேர்தல்களில் பாஜக நிலைமை மோசமாகும்”: “முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங். புகார்
மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காலியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு நாளில், சிபிஐ சட்டவிரோதமாக சோதனை நடத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், அது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
உத்தராகண்ட்டின் நைனிடாலில் காட்டுத் தீ: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. சனிக்கிழமை அந்தத் தீ தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தை அம்மாநில அரசு நாடியுள்ளது.
பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு இஸ்ரேல் கெடு: காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் எல்லைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கவுள்ள நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ‘நன்றி’!: முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரித்தக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மோடி நிராகரித்து வந்தார். ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளது. நன்றி பிரதமரே!" என்று தெரிவித்துள்ளார்.
வக்பு சொத்து குறித்த சட்டத் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது: 1976-ம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் கீழ் வக்பு வாரிய சொத்துகளை கொண்டு வந்த தமிழக அரசின் சட்டத் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அதிகாரம் அளித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘கர்நாடக மக்களை மோடி பழிவாங்குகிறார்’ - காங்கிரஸ்: கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மானமாக நிராகரிக்கப்பட்டதால், கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,499 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்திருக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு கவனம் பெறுகிறது.
“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்”: ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை பதவிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago