“மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை!” - தேர்தல் ஆணையத்தை ‘பொம்மை’ என சாடிய கபில் சிபல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த புகாருக்கு, பிரதமருக்கு பதிலாக பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார் கபில் சிபல். ‘மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் ஆணையத்தை ‘பொம்மை’ என்றும் சாடியுள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடிக்கு தேர்தல் ஆணையம் சிவந்த கண்களை காட்டவில்லை. மோடியின் வெளிப்படையான மதவாத கூற்றுகளுக்கு பாஜகவிடம் விளக்கம் கேட்கிறது. இது, தேர்தல் ஆணையம் ஓர் ‘உதவியற்ற பொம்மை’ என்பதையும், மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லாததையும் காட்டுகிறது. தனது சொந்த தேர்தல் விதிகளை மறந்த விட்டு தன்னையே ஏளனத்துக்குள்ளாக்குகிறது தேர்தல் ஆணையம். பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் கடந்த 21-ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “மக்களிடம் உள்ள சொத்துகள் கணக்கெடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு (முஸ்லிம்) பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.

பிரதமரின் இந்தக் குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன.

இதன் தொடர்ச்சியாக, பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர் மீதான புகார் குறித்து, வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுடன் சம்பந்தப்பட்ட கட்சி பிரமுகருக்கு எதிரான புகாரின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புகாருக்கு உள்ளான பிரதமர் மோடியின் பெயர் நோட்டீஸில் குறிப்பிடப்படவில்லை.

நாட்டில் பிரதமருக்கு எதிராக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77-வது பிரிவின் கீழ் இந்தப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தலின்போது நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். நடத்தை விதிகளை மீறினால் அவர்களை அழைத்து கண்டிக்க இந்தப் பிரிவு வகை செய்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE