விவிபாட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக் கோரும் வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விவிபாட் இயந்திரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது.” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

இந்தச் சூழலில் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. கடந்த 18-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப்.26) அளிக்கப்பட்டது.

தீர்ப்பின் போது, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலாம்.

பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகளை, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

> மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம்.

> மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

> தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

> தேர்தல் முடிவுகளை அறிவித்த பின் 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்.

> முடிவுகளை அறிவித்த பின் வாக்குபதிவில் குளறுபடி என்றுக் கூறி வேட்பாளர்கள் யாராவது இயந்திரத்தை சரி பார்க்க விரும்பினால் அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்டணம் வாங்கிக்கொண்டு சோதனை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணத்தை திருப்பி தர வேண்டும்.

> தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலாரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

> ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

> மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் முந்தைய அமர்வின் போது, “விவிபாட் இயந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? மைக்ரோ கன்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் ப்ரோகிராம் செய்யக் கூடியதா?” ஆகிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியதன் அடிப்படையில் ஆஜராகி விளக்கமளித்த அதிகாரிகள், “வாக்குப்பதிவுக்கு முன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் தனித்தனியாக சேமிக்கப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவை ஒரு யூனிட்டாக சேமிக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கன்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்பந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும்.

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கன்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை நேரடியாக (Physical) அணுக முடியாது. ஏனென்றால், அனைத்து மைக்ரோ கன்ட்ரோலர்களும் ஒருமுறை ப்ரோகிராமிங் செய்யப்பட்டவை. அவற்றை மாற்ற முடியாது. மேலும், மின்னணு வாக்குப்பதிவின் ஃபிளாஷ் மெமரியில் 1,024 சின்னங்கள் வரை பதிவேற்றம் செய்ய முடியும்” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்