புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி மீது புகார் வந்ததையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் கடந்த 21-ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், "மக்களிடம் உள்ள சொத்துகள் கணக்கெடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து களை சட்டவிரோதமாக ஊடுருவிய வர்களுக்கு (முஸ்லிம்) பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது" என தெரிவித்தார்.
பிரதமரின் இந்த குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன.
இதுபோல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளதாக பாஜக சார்பில் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், கோவையில் பேசிய ராகுல், பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை திருத்திவிடும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தவறாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நட்சத்திர பிரச்சாரகர்கள் மீதான புகார் குறித்து, வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் (ஜே.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே) தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீஸுடன் சம்பந்தப் பட்ட கட்சி பிரமுகர்களுக்கு எதிரான புகாரின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புகாருக்கு உள்ளான பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர் நோட்டீஸில் குறிப்பிடப்படவில்லை.
நாட்டில் பிரதமருக்கு எதிராக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77-வது பிரிவின் கீழ் இந்தப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தலின்போது நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். நடத்தை விதிகளை மீறினால் அவர்களை அழைத்து கண்டிக்க இந்தப் பிரிவு வகை செய்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago