செய்தித் தெறிப்புகள் @ ஏப்.25: இரண்டாம் கட்ட தேர்தல் முதல் மோடிக்கு கார்கே கடிதம் வரை

By செய்திப்பிரிவு

89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இரண்டாம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜாவையும், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திராவையும் களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார். இவர்களைத் தவிர மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஹேமமாலினி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

“எனக்கு சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்: “தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்குத் தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான்” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். முதல் சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் இரண்டாவது சம்மனை நயினார் நாகேந்திரனிடமே போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஒரு வாரத்தில் முடிவு: தேர்தல் ஆணையம்: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. மக்களவைத் தேர்தலின்போது மாணிக்கம் தாக்கூர் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சசிகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

பாஜகவில் சர்ச்சைக்குரிய யூடியூபர் மனிஷ் காஷ்யப்: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய யூடியூபர் மனிஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவில் இணைந்த பின் பேசிய மனிஷ் காஷ்யப், "இனி, தேசியத்துக்கு எதிரானவர்களுக்கும், சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும் எதிராக எனது போராட்டங்கள் அமையும்" என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் விதிமீறல்: மோடி, ராகுல் விளக்கம் அளிக்க உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக காங்கிரஸும், நாட்டில் வறுமை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி தவறான கூற்றை கூறி வருவதாக பாஜகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

காங். தேர்தல் அறிக்கை: மோடிக்கு கார்கே கடிதம்: “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து உங்களிடம் நேரில் விளக்கத் தயாராக உள்ளேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை வைத்து பிரிவினையை ஏற்படுத்துவது உங்கள் வழக்கமாகிவிட்டது. இவ்வாறு பேசுவது, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது" எனக் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

“பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது” - மம்தா காட்டம்: “26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட வாராது. நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அல்ல, உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளது. ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சிபிஐ, என்ஐஏ, மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டவற்றை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வியாழக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரஃபாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம்: காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ஆயத்தமாகி வரும் சூழலில். ‘இது மனிதாபிமான அளவில் பேரழிவை ஏற்படுத்தும்’ என சர்வதேச சமூகங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இஸ்ரேல், ரஃபாவில் உள்ள ஹமாஸ் பதுங்கிடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து பாலஸ்தீனர்களை அப்புறப்படுத்தும் பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறது.

இதனிடையே, காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து தயாரித்த பிராட்வே மியூசிக்கலுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது” - ஹெச்.ராஜா: 'எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது'' என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு | பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெம்போவில் ஏற்றிச் செல்லப்பட்ட விளையாட்டு வீரர்களின் உடமைகள்: நேபாளம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடமைகள் டெம்போ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 2019-ல் அசம்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்