மொரீனா (மத்தியப் பிரதேசம்): “கடந்த 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த பின்னர் தனது பரம்பரைச் சொத்துகள் யாவும் அரசுக்குச் செல்லாமல் இருக்கவே, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார்” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் தற்போது பரம்பரை சொத்து வரியை திரும்பக் கொண்டுவர முயற்சிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரீனாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பேசியது: "உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் பாவங்களை கேளுங்கள். நான் ஒரு சுவாரஸ்யமான உண்மையை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். சகோதரி இந்திரா காந்தி இறந்தபோது, நாட்டில் ஒரு சட்டம் இருந்தது. அதன்படி, செல்வத்தின் பாதி அரசாங்கத்துக்கு சென்றுவிடும். அப்போது இந்திரா காந்தி தனது சொத்துகளை அவரது மகன் ராஜீவ் காந்திக்கு எழுதி வைத்துவிட்டதாக ஒரு பேச்சு இருந்தது. அந்தச் சொத்துகள் யாவும் அரசுக்கு செல்லாமல் பாதுகாக்க, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார்.
நான்கு தலைமுறைக்குப் பின்னர் தனது செல்வத்தின் பலன்களை அறுவடை செய்த பின்பு, காங்கிரஸ் கட்சி இப்போது பரம்பரை சொத்து வரியை மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கஷ்டப்பட்டு உழைத்து நீங்கள் சம்பாதித்த சொத்துகள் உங்களிடமிருந்து பிடுங்கப்படும். ஆனால், அதுபோன்ற திட்டங்கள் வெற்றி பெற பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. காங்கிரஸின் திட்டத்துக்கு தடையாக உங்களுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் தடுப்புச் சுவராக 56 இன்ச் மார்பு கொண்ட மோடி நிற்கிறேன். அதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிக அளவில் என்னை வசைபாடுகின்றனர்.
பாரத மாதாவின் கைகளில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி அவரது கைகளை வெட்டி நாட்டை பிளவுபடுத்தப் பார்க்கிறது. தனது முஸ்லிம் வாக்கு வங்கியை பாதுக்காப்பதற்காக, காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி, ஒபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்பியது. மேலும், மதத்தின் அடிப்படையிலான சமரச அரசியல் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பியது.
நாட்டின் வளங்களை முதலில் பெறும் உரிமை முஸ்லிம்களுக்கே என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. அதேநேரத்தில், ஏழைகளுக்கே முதல் உரிமை என்று நான் கூறிகிறேன். இன்று காங்கிரஸின் இளவரசர், மோடியைத் திட்டுவதன் மூலம் மகிழ்ச்சியடைகிறார். வாரிசுகள் அவதூறுகளைக் கேட்க நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், மக்களுக்கும் பாரத மாதாவுக்கும் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். பல ஆண்டுகளாக ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அனுமதிக்கவில்லை. ஆனால் நாங்கள் அதைச் செய்தோம்.
பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிப்பவர்கள், அவை அழிக்கப்படுவதை உறுதி செய்வார்களா? இந்தத் தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். யாரவது ஒருவர் முஸ்லிம் என்பதால் இலவச ரேஷன் கிடைக்காலம் இருந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாஜக அரசு 80 கோடி மக்களுக்கு எந்த வித பாகுபாடுமின்றி இலவச ரேஷன் வழங்கியது.
நமது நாட்டின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அரசியல் அமைப்பின் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை பின்வாசல் வழியாக அனுமதித்து அவரின் முதுகில் குத்தியது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டவிரோதமாக பல முஸ்லிம்களை ஒபிசி பிரிவில் இணைத்துள்ளது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது மட்டுமின்றி அரசியலமைப்புக்கு எதிரானது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு பற்றி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி முன்பு ஆட்சிக்கு வந்தபோது ஆந்திராவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. பின்னர் அதை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு டிச.19-ம் தேதி காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு குறிப்பைக் கொண்டு வந்தது. ஒபிசி பிரிவுக்கான 27 சதவீதம் இடஒதுக்கீட்டை குறைத்து அதனை மத அடிப்படையில் வழங்கவேண்டும் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒபிசிகளுக்கான உரிமைகளை ரத்து காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை பலப்படுத்த விரும்புகிறது" என்று பிரதமர் மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடிபிடித்துள்ள நிலையில், பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகாரன பிரதமர் மோடி, காங்கிரஸுக்கு எதிராக வளங்கள் பகிர்வு மற்றும் பரம்பரைச் சொத்து வரி என்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை நீட்டி சாடிவருகிறார். மேலும், மக்களை கொள்ளையடிக்கும் காங்கிரஸின் திட்டத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதாக சபதம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு தலைவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகருமான சாம் பிட்ரோடா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “அமெரிக்காவில் பாரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. உதாரணமாக ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்பிலான சொத்து இருந்தால், அவர் உயிரிழக்கும்போது 55% சொத்தை அரசு எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள 45% சொத்துகளை மட்டுமே அவருடைய வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இது ஒரு நல்ல சட்டம். இது எனக்கு நியாயமாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்” என பிட்ரோடா பேசியிருந்தார்.
இவரது இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான உள்நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று பிரதமர் மோடி அக்கட்சியை சாடி வருகிறார்.
காங்கிரஸ் மறுப்பு: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசியல் சாசனம் உள்ளது. அதை மீறி எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு அதுபோன்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. அவருடைய கருத்துகளை எங்கள் வாயில் ஏன் திணிக்கிறீர்கள். வெறும் ஓட்டுக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் அவர் (பிரதமர்) விளையாடி வருகிறார்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல” என்றார். இதுகுறித்து சாம் பிட்ரோடா எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரி வசூலிப்பது குறித்து நான் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் திரித்து கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரத்தை திசை திருப்பவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி மற்றும் தங்கம் முழுவதும் பறிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்து உண்மை அல்ல” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago