புதுடெல்லி: “பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை. அதுபோன்ற சிந்தனையும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். அதுபோன்ற சிந்தனையும் இல்லை. சாம் பிட்ரோடா ஒரு சிறந்த தொழில் வல்லுநர். இந்தியாவின் வளர்ச்சிக்கு பல பங்களிப்புகளை செய்துள்ளவர். ஒரு நண்பராக, தத்துவ ஞானியாக, வழிகாட்டியாக எனக்கும், பலருக்கும் அவர் இருந்துள்ளார். தீவிர எண்ணம் காரணமாக அவர் தனது தனிப்பட்டக் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவரது அந்தக் கருத்து அமெரிக்காவுக்குப் பொருந்தக்கூடியது. அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகவும் அவர் பேசவில்லை.
சாம் பிட்ரோடா பேசிய பரம்பரை சொத்து வரி விவகாரத்தைப் பொறுத்தவரை, அதுபோல் எந்த ஒரு திட்டமும் இந்திய தேசிய காங்கிரஸிடம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், எஸ்டேட் வரியை 1985-ல் ரத்து செய்தவர் பிரதமர் ராஜிவ் காந்தி.
முதல் கட்டத் தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்டது. 2-வது கட்டத் தேர்தலிலும் பாஜக சிறப்பாக செயல்படாது. பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. இண்டியா கூட்டணி தெளிவான பெரும்பான்மை வெற்றியைப் பெறப் போகிறது.
» விவிபாட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | உச்ச நீதிமன்ற கேள்விகளும், தேர்தல் ஆணைய விளக்கமும்
» “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் வெளிவருகின்றன” - பிரதமர் மோடி @ ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம்
பிரதமர் மோடியின் பிரச்சாரம் தற்போது விஷத்தால் நிறைந்திருக்கிறது. அவரது பேச்சு, கொந்தளிப்புடன் அவர் இருப்பதைக் காட்டுகிறது. பிட்ரோடாவின் கருத்து அவருடையது. அது காங்கிரஸின் கருத்து அல்ல. உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கில், அவநம்பிக்கையுடனும், திட்டமிட்ட ரீதியிலும் பிரதமர் மோடி இவ்வாறு பேசி வருகிறார்.
பரம்பரை சொத்து வரி குறித்து 2014-ல் இருந்து மோடி அரசு பேசி வருகிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் ஜெயந்த் சின்ஹா, பரம்பரை சொத்து வரியை அறிமுகப்படுத்த விரும்புவதாக 2014-ல் பகிரங்கமாகப் பேசினார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மேற்குலக நாடுகளில் விதிக்கப்படும் பரம்பரை சொத்து வரி குறித்து 2018-ல் புகழ்ந்து பேசி உள்ளார்.
மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதி உதவி கிட்ட இந்த பரம்பரை சொத்து வரி உதவுவதாக ஜெட்லி கூறினார். உண்மையில், பரம்பரை சொத்து வரி விதிப்பு குறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை விளக்க கடமைப்பட்டவர் பிரதமர் மோடிதான்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையும் பின்னணியும்: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அனைத்தையும் அல்ல. உங்கள் செல்வத்தில் பாதியை. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.
இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. 10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை ஒரு புதிய கொள்கையாக, புதிய திட்டமாக பார்க்கிறோம். இதில் அடங்கியிருப்பது, மக்களின் நலன்மட்டுமே; பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல” என்று கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. பிரதமர் மோடி முதல் அமித் ஷா வரையிலான பாஜக தலைவர்கள், இந்தக் கருத்தை தேர்தல் பிரச்சார அஸ்திரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பேச்சு: “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதை சாம் பிட்ரோடா பகிரங்கமாக கூறினார். இப்போது காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துகளுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள். அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அப்படியானால், 'கை' உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை பறித்துவிடும்” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
சாம் பிட்ரோடோ மறுப்பு: ‘பரம்பரை சொத்து வரி’ குறித்த தனது கருத்து சர்ச்சையான நிலையில், சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “55% எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள பரம்பரரை சொத்து வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இது காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago