விவிபாட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | உச்ச நீதிமன்ற கேள்விகளும், தேர்தல் ஆணைய விளக்கமும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். புதன்கிழமை நடந்த விசாரணையின்போது விவிபாட் குறித்த சந்தேங்களை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படுகின்றன. இது வெறும் 5 சதவீதம் மட்டுமே. தற்போதைய மக்களவைத் தேர்தலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, "விவிபாட் இயந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? மைக்ரோ கன்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் ப்ரோகிராம் செய்யக் கூடியதா?” ஆகிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியதன் அடிப்படையில் ஆஜராகி விளக்கமளித்த அதிகாரிகள், "வாக்குப்பதிவுக்கு முன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரம் தனித்தனியாக சேமிக்கப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவை ஒரு யூனிட்டாக சேமிக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கன்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்பந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும்.

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கன்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை நேரடியாக (Physical) அணுக முடியாது. ஏனென்றால், அனைத்து மைக்ரோ கன்ட்ரோலர்களும் ஒருமுறை ப்ரோகிராமிங் செய்யப்பட்டவை. அவற்றை மாற்ற முடியாது. மேலும், மின்னணு வாக்குப்பதிவின் ஃபிளாஷ் மெமரியில் 1,024 சின்னங்கள் வரை பதிவேற்றம் செய்ய முடியும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, கடந்த அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பு முன்வைத்த வாதத்தில் கூறியது: "விவிபாட் இயந்திரங்கள் 7 விநாடிகள் மட்டுமே ஒளிர்கிறது. இந்த குறுகிய நேரத்தில் ஒப்புகைச் சீட்டு துண்டிக்கப்பட்டு, பெட்டியில் விழுவதை பார்க்க முடியவில்லை. எனவே, வாக்குப் பதிவு முழுவதும் விவிபாட் இயந்திரங்களை ஒளிரச் செய்ய வேண்டும். ஒப்புகை சீட்டுகளை வாக்காளர்களே கையில் எடுத்து பெட்டியில் போடச் செய்யலாம்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விவிபாட் இயந்திரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்ய முடியும். விவிபாட் இயந்திரத்தின் 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் கண்டிப்பாக எண்ண வேண்டும்" என்று கோரப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் முன்வைத்த வாதத்தில், "ஒவ்வொரு தேர்தலின்போதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன. ஊடகங்களில் உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இது இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கிறது. வாக்கு சதவீதத்தை கடுமையாகப் பாதிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. விவிபாட் இயந்திரங்களின் வடிவமைப்பு, செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோருவது தேவையற்றது. ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று கோரி ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல தற்போதைய வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதை தடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE