“காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் வெளிவருகின்றன” - பிரதமர் மோடி @ ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம்

By செய்திப்பிரிவு

அம்பிகாபூர் (சத்தீஸ்கர்): காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘பரம்பரை வரி’ குறித்த கருத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன” என்று விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதை அவர் (சாம் பிட்ரோடா) பகிரங்கமாக கூறினார். இப்போது அவர்கள் (காங்கிரஸ்) ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள். அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அப்படியானால், 'கை' (காங்கிரஸ் தேர்தல் சின்னம்) உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை பறித்துவிடும்.

நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரி விதிக்கும். உங்கள் ஆயுள் முடிந்த பிறகு, அது உங்கள் மீது பரம்பரை சொத்து வரியைச் சுமத்தும். அவர்கள் (காங்கிரஸ்) உங்கள் சொத்துகளையும் உங்கள் குழந்தைகளின் உரிமைகளையும் பறிக்க விரும்புகிறார்கள். சாமானிய இந்தியர்கள் தங்கள் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. நுகர்வு கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டது அல்ல நம் நாடு. பொருளீட்டுதல், ஈட்டிய பொருளின் மதிப்பை அதிகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

திருமணத்தின்போது பேரக்குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும் என்று நினைத்து வயதான தாத்தா, பாட்டி ஆகியோர் தங்கள் சிறிய ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். நாட்டு மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப செலவு செய்கிறார்கள். அதேநேரத்தில், சொத்து சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தியாவின் இந்த அடிப்படை மதிப்பீடு மற்றும் கலாச்சாரத்தின் மீது காங்கிரஸ் கடுமையாகத் தாக்க திட்டமிடுகிறது. காங்கிரஸை நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் கைப்பற்றியுள்ளனர் என்று நான் சொன்னபோது, ​​அமெரிக்காவை சமாதானப்படுத்த ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் குற்றச்சாட்டுகளை கூறியபோது, அவர்கள் திரும்பி வருவது போல் நடித்தனர். ஆனால், அவர்கள் உங்கள் சொத்துகளை சூறையாடி உங்கள் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள். இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?

நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு மக்களின் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது. காங்கிரஸின் கண்கள் உங்கள் இடஒதுக்கீட்டின் மீது மட்டுமல்ல, உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சொத்துக்களையும் எக்ஸ்ரே எடுக்கப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வைத்திருக்கும் சிறிய சொத்துகளையும் காங்கிரஸ் பரிசோதிக்கும். சுர்குஜாவில் உள்ள நமது பழங்குடியினர் பழங்குடியினரின் ஆபரணங்களையும் தாலியையும் அணிந்துகொள்வார்கள். இவை அனைத்தையும் காங்கிரஸ் பறித்துக்கொள்ளும். அவற்றை சமமாக பிரித்துக்கொடுக்கும். உங்களிடம் இருந்து கொள்ளையடித்து யாருக்கு விநியோகிப்பார்கள் தெரியுமா? இந்த பாவத்தைச் செய்ய நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ் மறுப்பு: முன்னதாக, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான பிட்ரோடா, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அனைத்தையும் அல்ல. உங்கள் செல்வத்தில் பாதியை. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.

இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. 10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை ஒரு புதிய கொள்கையாக, புதிய திட்டமாக பார்க்கிறோம். இதில் அடங்கியிருப்பது, மக்களின் நலன்மட்டுமே; பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல” என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றிய நிலையில், சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "55% எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள பரம்பரரை சொத்து வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இது காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார். அதேபோல், சாம் பிட்ரோடாவின் கருத்து கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்