“பட்டியலின, பழங்குடியின மக்களை இண்டியா கூட்டணி அரசு உயர்த்தும்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "திமுகவின் சமூக நீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமையவுள்ள இண்டியா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரை வாசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சார்பில், திமுக எம்.பி வில்சன் உரையை வாசித்தார். அந்த உரையின் விவரம்:

“இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழகம் ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருதுகிறேன். சமூக நீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழகம் திகழும் மரபு 1921-ம் ஆண்டு நீதிக் கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.

விடுதலைக்கு பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம், ‘happenings in Madras’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்தச் சட்டத் திருத்தம் உறுதி செய்தது.

தற்போது பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் 69% ஆக உள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது எனத் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதலாகத் தமிழகத்தில் இது நடைமுறையில் இருக்கிறது.

குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதிச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம். மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.

திமுகவின் சமூக நீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமையவுள்ள இண்டியா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “இன்று 90 சதவீத இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அநீதியைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி இது என எதிர்க்கிறார்கள். தேசபக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு எனும் எக்ஸ்-ரேக்கு பயப்படுகிறார்கள். நான் உறுதியாகக் கூறுகிறேன். எந்த சக்தியாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது” என்று பேசினார். அதன் முழு விவரம்: “சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்