“நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி” - பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்புதான் இந்த மக்களவைத் தேர்தல்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வயநாட்டில் செய்தியாளர்களிடம் கூறும்போது “கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை.

பாஜகவினர் வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாக, பாஜக தலைவர்கள் மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளை கொண்டு வருவார்கள். அதாவது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு” என்றார்.

முன்னதாக, பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. தேசம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. யாரேனும் உங்களது தங்கத்தை அல்லது மாங்கல்யத்தை பறித்தார்களா?

போரின்போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி. மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா. பெண்களின் போராட்டத்தை பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது. அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார். தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இப்படி பேசுகிறார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் குறித்து எதுவும் பேசாமல் இருந்தவர் தானே அவர்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE