கொச்சி(கேரளா): சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமித் ஷா, "சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது. முதலில் அவர்கள் கணக்கெடுப்பு நடத்துவோம் என தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். நாட்டின் வளங்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். தற்போது, அமெரிக்காவில் தனியார் சொத்தில் 55% அரசு எடுத்துக்கொள்வதாகவும், இது நியாயமானதுதான் என்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா கூறி இருக்கிறார்.
இந்த விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பியபோது, மக்களின் சொத்துகளை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரசும் கூறியது. ஆனால், சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டது. நாட்டு மக்களின் தனிச் சொத்தை கணக்கெடுத்து அதை அரசு சொத்தாக மாற்றி, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதாவது நாட்டின் வளத்தில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பகர்ந்தளிக்க விரும்புகிறார்கள்.
ஒன்று, தனியார் சொத்துகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ள அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும். சாம் பிட்ரோடாவின் கருத்தை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் நோக்கம் தற்போது வெளிப்பட்டுவிட்டது. மக்கள் இதனை அறிவுபூர்வமாக அணுக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
» மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: முக்கிய சாலை சேதம்
» மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான பிட்ரோடா, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அனைத்தையும் அல்ல. உங்கள் செல்வத்தில் பாதியை. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.
இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. 10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை ஒரு புதிய கொள்கையாக, புதிய திட்டமாக பார்க்கிறோம். இதில் அடங்கியிருப்பது, மக்களின் நலன்மட்டுமே; பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல" என்று கூறி இருந்தார்.
சாம் பிட்ரோடாவின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றி உள்ளது. இதையடுத்து, சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "55% எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள பரம்பரரை வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இது காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார். அதேபோல், சாம் பிட்ரோடாவின் கருத்து கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago