ஆந்திர தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டி: முதல்வர் ஜெகன்மோகன் சொத்து மதிப்பு ரூ.530 கோடி

By என். மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திர மாநில தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து ரூ.529.87 கோடியாகும். ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் மே 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும் தெலுங்கு தேசம்- பாஜக- ஜனசேனா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு தரப்பில் இருந்தும் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை புலிவேந்துலா சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாக இவரது குடும்ப சொத்து விவரம், வழக்குகள், கடன் குறித்த விவரங்கள் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜெகனின் குடும்ப சொத்து ரூ.757.65 கோடி ஆகும். இதில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மட்டும் ரூ.529.87 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் இவரது சொத்து மதிப்பு ரூ.375.20 கோடியாக இருந்தது. இவரது மனைவி பாரதி ரெட்டிக்கு ரூ.176 கோடியும், மூத்த மகள் ஹர்ஷினி ரெட்டி பெயரில் ரூ.25 கோடியும், இளைய மகள் வர்ஷா ரெட்டி பெயரில் ரூ. 25 கோடியும் உள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி 7 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதேபோன்று இவரது மனைவி பாரதி ரெட்டி 22 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். மூத்த மகள் ஹர்ஷினி ரெட்டி 7 நிறுவனங்களிலும், இளைய மகள் வர்ஷா ரெட்டி 9 நிறுவனங்களிலும் மொத்தமாக ரூ.344 கோடியை முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், இவர்களில் யாருக்கும் சொந்தமாக கார் இல்லை. பாரதி ரெட்டிக்கு ரூ. 5 கோடி மதிப்பிலும் மகள்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.8 கோடி மதிப்பிலும் தங்க நகைகள் உள்ளன.

முதல்வர் ஜெகன்மோகன் மீது 26 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகளை சிபிஐயும், 9 வழக்குகளை அமலாக்கத் துறையும் பதிவு செய்துள்ளன. ஆந்திரா, தெலங்கானாவில் இவர் மீது மேலும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரூ.5,705 கோடி சொத்து: தெலுங்கு தேசம் கட்சியின் குண்டூர் மக்களவை தொகுதி வேட்பாளர் பி. சந்திரசேகர். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். மருத்துவ துறையை சார்ந்த இவரின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி ஆகும். இதில் இவருக்கு மட்டுமே ரூ.2,316 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன. இவரது மனைவி ஸ்ரீரத்னா பெயரில் ரூ.2,289 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன. இவர்களது பிள்ளைகள் பெயரில் மொத்தம் ரூ.992 கோடி சொத்துகள் உள்ளன. சந்திரசேகரிடம் ரூ.6 கோடி மதிப்பிலான 4 விலை உயர்ந்த கார்கள் உள்ளன.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இம்முறை மங்களகிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு மொத்தம் ரூ.542.17 கோடி சொத்துகள் உள்ளன. இவரது மனைவி பிராம்மனிக்கு மொத்தம் ரூ. 80 கோடி சொத்துகள் உள்ளன. இவர்களது மகன் தேவான்ஷுக்கு ரூ.27 கோடி சொத்துகள் உள்ளன

ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நேற்று பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த 5 ஆண்டு நிலவரப்படி இவரின் சொத்து மதிப்பு ரூ.114.76 கோடியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE