இந்திய ஜனநாயகத்தில் தலையிடுவதா?- மேற்கத்திய ஊடகங்களை சாடும் அமைச்சர் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “இந்திய மக்களவைத் தேர்தல் மீது கருத்துகள் என்ற பெயரில் மேற்கத்திய ஊடகங்கள் நியாயமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றன. நம் தேர்தலில் அவர்கள் ஏதோ அரசியல் பங்களிப்பு உள்ளவர்கள் போல் கருத்து சொல்கின்றனர். இதனை நாம் வலுவாக எதிர்க்க வேண்டும்” என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசியவாத சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “இந்திய மக்களவைத் தேர்தல் மீது கருத்துகள் என்ற பெயரில் மேற்கத்திய ஊடகங்கள் நியாயமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றன. நம் தேர்தலில் அவர்கள் ஏதோ அரசியல் பங்களிப்பு உள்ளவர்கள் போல் கருத்து சொல்கின்றனர்.

மேற்கத்திய ஊடகங்களின் சலசலப்பைக் கேட்க முடிகிறது. அவர்கள் நம் ஜனநாயகத்தை விமர்சிக்கிறார்கள். அவர்கள் அப்படி விமர்சிக்க, தங்களையும் நமது அரசியல் பங்காளிகள் என அவர்கள் நினைத்துக் கொள்வதே காரணம்.

சமீபத்தில் ஒரு மேற்கத்திய ஊடகச் செய்தியை வாசித்தேன். கோடை வெயில் தகிக்கிறது. இப்போது ஏன் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறார்கள் என எழுதியிருந்தார்கள். அதற்கு என் பதில், உங்கள் நாடுகளில் பதிவாகும் உச்சபட்ச சாதனை வாக்கு சதவீதத்தைவிட எங்கள் நாட்டில் கொளுத்தும் கோடையில் பதிவாகும் குறைந்தபட்ச வாக்கு சதவீதம் அதிகம் என்பதே. இப்படியான செய்திகள் மூலம் அவர்கள் இந்தியாவுடன் விளையாடுகிறார்கள். இது உண்மையில் வெறும் அரசியல். உலகளவுக்குக் கொண்டு செல்லப்பட்ட உள்ளூர் அரசியல். அதனாலேயே அவர்கள் நம் ஜனநாயகத்துக்குள் ஊடுருவலாம் என நினைக்கிறார்கள்.

நம் நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?. அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் இருக்கிறதா என்ன? அவர்களது எண்ணம் தவறு என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு இதுதான் சரியான தருணம். இது போன்ற செய்திகள், விமர்சனங்கள், அறிக்கைகளுக்கு எதிராக வலுவான குரலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இதை அனுமதித்தால் அவர்கள் எல்லாவற்றிலும் கேள்வி கேட்பார்கள். அவர்கள் நம் தேர்தல் நடைமுறையைக் கேள்வி கேட்பார்கள். நம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். ஏன் வானிலையைக் கூட கேள்வி கேட்பார்கள்.

“பாஜக நியாயமற்று நடக்கிறது. பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என நம்புகிறது” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் கொக்கரிக்கின்றன. ஆனால் பாஜகவின் வெற்றி நம்பிக்கை அதன் வாக்குறுதியால் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்காக செய்தவற்றால் கிடைத்த நம்பிக்கை. இந்த அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் வெறும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கானது மட்டுமல்ல. அந்த முடிவுகள் இந்தியாவுக்கு, இந்திய சமூகத்துக்கு, வரும் சந்ததிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். பிரதமர் மோடியால் இந்தியா மீது அயல்நாடுகளுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. அவருடன் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில் நான் இதனைக் கூறுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நம் தேசத்தின் மீது பிரதமர் மோடியால் பதிந்துள்ள பார்வை மற்றும் அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்காக நாடு இன்று எவ்வாறு தயாராகி வருகிறது என்பதைக் கவனிப்பதே நம் பார்வையாக இருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்