“உண்மையை வெளிப்படுத்தியதால் இண்டியா கூட்டணியில் பீதி” - ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: “மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்தது.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளன. இந்தநிலையில், மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்து வரும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் உங்கள் சொத்தை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.

இப்படி, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்திய போது, ​​அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையை கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?.

நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும் இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் செய்யத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதுமட்டுமல்ல, 2004ல் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் முதல் வேலையாக, எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முடியவில்லை” என்று பேசியுள்ளார்.

ஹனுமான் சாலிசா குறித்து...: தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஹனுமான் சாலிசாவை கேட்பதும், நம்பிக்கையைப் பின்பற்றுவதும் குற்றமாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஹனுமான் சாலிசாவைக் கேட்டதற்காக ஒரு ஏழை இரக்கமின்றித் தாக்கப்பட்டார்.” என்றுதெரிவித்தார்.

முன்னதாக, நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்