புதுடெல்லி: இண்டியா கூட்டணி சார்பில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற் கொண்டனர். இதில் முக்கியமாக பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்தக் கூட்டத்தில் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சரத்பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின், எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் விலகிவிட்டன. பிஹாரில் மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து நிதிஷ்குமார் முதல்வரானார்.
மேலும் இண்டியா கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு விஷயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் மேற்குவங்கத்தின் 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த சூழலில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 5-ம் தேதி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை சில கூட்டணி கட்சிகளின் கொள்கை,கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு தீர்வு காணவும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் இண்டியா கூட்டணி சார்பில் தேசிய அளவில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அந்த கட்சியையும் ஒன்றிணைத்து தேர்தல் அறிக்கை வெளியிட காங்கிரஸ் தீவிர முயற்சிகளை செய்தது.
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. இதனை திரிணமூல் காங்கிரஸ் மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும் பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இதனால் இண்டியா கூட்டணியின் பொது தேர்தல் அறிக்கை திட்டத்தில் இணைய திரிணமூல் காங்கிரஸ் மறுத்து வருகிறது. எனினும் அந்த கட்சியுடன் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை திரிணமூல் காங்கிரஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் அந்த கட்சியை தவிர்த்துவிட்டு இண்டியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago