வாராணசியில் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் புதிய சத்திரம் அமைக்க முடிவு: 50 வருட ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் பாஜக அரசால் மீட்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் நிர்வாக சொசைட்டியின் புதிய சத்திரத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது

உ.பி.யின் புனித நகரமான வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. காசிவிஸ்வநாதர் கோயில் தரிசனத்துக்காக பல ஆண்டுகளாக அன்றாடம்தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கான உணவு, தங்கும் வசதி மற்றும் காசி விஸ்வநாதர், ஸ்ரீராமர், முருகன் உள்ளிட்ட கடவுள்களுக்கானப் பணிக்காக 1813-ல் ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் நிர்வாக சொசைட்டி அமைக்கப்பட்டது.

உ.பி.யில் அமைந்த இந்த சொசைட்டியின் சார்பில் வாராணசி, அலகாபாத், அயோத்தி, கயா, நாசிக்,கொல்கத்தா, தாராகெஷ்வர் ஆகியநகரங்களில் சத்திரங்கள் கட்டப்பட்டு நற்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் காரைக்குடி, தேவிப்பட்டினம், பழனி மற்றும் சென்னையிலும் சத்திரங்கள் உள்ளன.

இந்நிலையில், வாராணசியின் சிக்ரா எனும் இடத்தில் 1894-ல்சொசைட்டி சார்பில் 65,000 சதுரஅடி நிலம் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது. கோயில்களுக்கான பூக்கள் பூக்கும் நந்தவனமான இது, சுமார் 50 வருடங்களாக ஒருவர் பின் ஒன்றாக மூன்று பேரின் ஆக்கிரமிப்பில் இருந்தது.

இந்த நிலமானது, பாஜக ஆளும் உ.பி.யின் வாராணசி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதில், அந்தத் தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிருந்து உதவி இருந்தனர்.

கடந்த மே, 2022-ல் நடைபெற்ற இந்த நிலம் மீட்பு நடவடிக்கையில் அப்போது வாராணசியில் உதவி ஆட்சியராக இருந்த தமிழரான ஏ.மணிகண்டன் பங்கும் இருந்தது. இந்த நிலத்தில்தான் ரூ.50 கோடி செலவில் 135 அறைகள் கொண்ட 10 மாடி புதிய சத்திரம் கட்டப்பட உள்ளது.

இதற்காக இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.முத்தையா, தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்க சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் வாராணசி கண்டோன்மெண்ட் தொகுதி எம்எல்ஏவான சவுரப் ஸ்ரீவாத்ஸவா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளேட்டிடம் நகரத்தார் சொசைட்டியின் தலைவரான எல்.நாரயணன் கூறும்போது, ‘`எங்களது அனைத்து சத்திரங்களும் எந்தவித லாபநோக்கும் இன்றி திருப்பணிக்கான சேவையில் செயல்படுகின்றன. 1901-ல் இங்கு கட்டப்பட்ட எங்கள் விசாலாட்சி கோயிலின் பூஜை பணியில் உள்ள சில ஆக்கிரமிப்பு சிக்கல்களையும் உ.பி. முதல்வரிடம் எடுத்துக் கூறி சரிசெய்து விடுவோம். அடுத்த 18 மாதங்களில் இந்த புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும். இந்த சத்திரம், பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படும்'' என்றார்.

வாராணசியின் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி கோயில்களில் அன்றாடம் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இவற்றில் மூன்று கால பூஜைகளின் ஆரத்திகளுக்காக வாராணசியின் கதவுலியாவிலுள்ள நகரத்தாரின் சத்திரத்திலிருந்து பூக்களும், பூஜைக்குரியப் பொருட்களும் அனுப்பப்படுகின்றன. சம்போ என்றழைக்கப்படும் இந்த ஆரத்தி ஊர்வலம் வாராணசியில் மிகவும் பிரபலமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE