தேர்தலில் பதிவாகும் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படுகின்றன. இது வெறும் 5 சதவீதம் மட்டுமே.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் கடந்த 16-ம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ராம நவமி விடுமுறையைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றுவழக்கு விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், கோபால் சங்கர நாராயணன், சஞ்சய் ஹெக்டே, நிஜாம் பாஷா உள்ளிட்டோர் ஆஜராகினர். தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுதாரர்கள் தரப்பு முன்வைத்த வாதத்தில் கூறியதாவது: விவிபாட் இயந்திரங்கள் 7 விநாடிகள் மட்டுமே ஒளிர்கிறது. இந்த குறுகிய நேரத்தில் ஒப்புகை சீட்டு துண்டிக்கப்பட்டு, பெட்டியில் விழுவதை பார்க்க முடியவில்லை. எனவே வாக்குப் பதிவு முழுவதும் விவிபாட் இயந்திரங்களை ஒளிரச் செய்ய வேண்டும். ஒப்புகை சீட்டுகளை வாக்காளர்களே கையில் எடுத்து பெட்டியில் போடச் செய்யலாம்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விவிபாட் இயந்திரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.இதன்மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்ய முடியும். விவிபாட் இயந்திரத்தின் 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் கண்டிப்பாக எண்ண வேண்டும். இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது:

ஒவ்வொரு தேர்தலின்போதும்மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன. ஊடகங்களில் உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இது இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கிறது. வாக்கு சதவீதத்தை கடுமையாகப் பாதிக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. விவிபாட் இயந்திரங்களின் வடிவமைப்பு, செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோருவது தேவையற்றது.

ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று கோரி ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல தற்போதைய வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE