தமிழகம் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தகவல்கள்

By செய்திப்பிரிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்த முக்கியத் தகவல்கள்...

> இன்று (ஏப்.19) 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது - 73, எஸ்சி -18, எஸ்டி - 11) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் (வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் தொகுதிக்கேற்ப மாறுபடலாம்).

> 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 16.63 கோடி வாக்காளர்கள் முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்க உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்காளர்களில் 8.4 கோடி பேர் ஆண்கள். 8.23 கோடி பேர் பெண்கள். 11,371 பேர் மூன்றாம் பாலினத்தினர். முதல் முறை வாக்காளர்களாக 35.67 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக 3.51 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். போட்டியில், 1625 (ஆண்கள் 1491, பெண்கள் 134) வேட்பாளர்கள் உள்ளனர்.

> வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்காக 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள் , சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமைதியாகவும் சுமூகமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் பாதுகாப்பானதாக இருப்பதற்கு வாக்குச் சாவடிகளில் போதிய அளவு மத்தியப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும், நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 361 பார்வையாளர்கள் (127 பொதுப்பார்வையாளர்கள், 67 காவல் துறை பார்வையாளர்கள், 167 செலவினப் பார்வையாளர்கள்) ஏற்கெனவே அவரவர் தொகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்புடன் தேர்தல் ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுவார்கள். சில மாநிலங்களில் சிறப்புப் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

> வாக்காளர்கள் எந்த வகையிலும் திசை திருப்பப் படாமல் கண்டிப்பாகவும், விரைந்தும் செயல்படுவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு 4,627 பறக்கும் படைகளும், 5208 நிலைக்கண்காணிப்புக் குழுக்களும், 2028 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 1255 வீடியோ பார்வையிடல் குழுக்களும் செயல்படும்.

> சட்டவிரோதமாக மதுபானங்கள், போதைப்பொருள்கள், பணம், இலவசப் பொருட்கள், கொண்டுவரப்படாமல் கண்காணிப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே 1,374 சோதனைச் சாவடிகளும், சர்வதேச எல்லையில் 162 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் வான் பாதைகளிலும், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

> 102 மக்களவைத் தொகுதிகளில், பதிவு செய்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 14.14 லட்சம் மூத்த வாக்காளர்களும் 13.89 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் தங்களின் வீடுகளில் இருந்தே வாக்களிப்பதற்கான வசதியை தெரிவு செய்துள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க முடிவு செய்தால் அவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்களித்த பின் வீட்டில் கொண்டுவிடுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

> மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சைகை மொழி மற்றும் ப்ரெய்லி எழுத்து முறையைப் பயன்படுத்தி வாக்களிக்கவும் உதவியாளர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் Saksham App மூலம் சக்கர நாற்காலி வசதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

> அனைத்து வாக்காளர்களும் சிரமமின்றி வாக்களிக்க குடிநீர், கூடாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

> 5,000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட முற்றிலுமாக பெண்களாலேயே நிர்வகிக்கப்பட உள்ளன. 1000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும்.

> பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆணையத்தின் அழைப்பாகவும், இது இருக்கும்.

> வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடி விவரம், தேர்தல் தேதி போன்றவற்றை https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

> தவறான தகவல்களை தவிர்க்கவும், அனைத்துவிதமான கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைப் பெற, தேர்தல் ஆணையத்தின் உண்மையும் கற்பிதமும் என்ற பதிவேட்டை https://mythvsreality.eci.gov.in/ என்ற இணைப்பின் மூலம் பயன்படுத்தலாம்.

> வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், கல்வி விவரம், குற்றப் பின்னணி பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை https://affidavit.gov.in/ என்ற இணைப்பின் மூலம் காணலாம்.

> முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைமுறைகள் பற்றி செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சுமார் 47,000 ஒப்புதல் கடிதங்களை வழங்கியுள்ளது. சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பு வசதி செய்துத் தரப்பட்டுள்ளது.

> தேர்தல் நாளில் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுகின்ற தேர்தல் ஆணையத்தின் வாக்குச் செலுத்தியோர் விவரம் பற்றிய செயலி மூலம் ஊடகவியலாளர்களும் தொடர்புடைய மற்றவர்களும் அவ்வப்போதைய நிலையை தெரிந்துகொள்ளலாம்.

> 2024 பொதுத் தேர்தல் தொடர்பாக தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குவதற்கென்றே https://elections24.eci.gov.in/ என்ற இணையதளத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தயார் நிலையில் தமிழகம்! தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, வெள்ளிக்கிழமை அன்று சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்