பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க முன்வந்த பாபா ராம்தேவ் - ‘தவறான விளம்பர’ வழக்கு அப்டேட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவன பொருட்கள் தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்கான நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுர்வேதத்தின் நன்மைகளை வலியுறுத்த மற்ற மருத்துவ முறைகளை சாடியது ஏன் என்று நீதிபதி அமானுல்லா கேள்வி எழுப்பினார்.

அதற்கு, "தவறுக்கு வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன். பொதுவெளியில் மன்னிப்புக் கேட்கவும் தயார். எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன்" என்று ராம்தேவ் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

"மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. உங்களை மன்னிப்பதா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. நீங்கள் மூன்று முறை நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளீர்கள். முந்தைய உத்தரவுகள் எங்கள் பரிசீலனையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாத அளவுக்கு நீங்கள் அப்பாவி இல்லை" என்று நீதிமன்றம் கூறியது.

அடுத்த விசாரணை ஏப்ரல் 23-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், "நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

முன்னதாக, கடந்த 10ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையின்போது, பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பாபா ராம்தேவ், ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. அதோடு, ‘இந்த வழக்கில் நாங்கள் தயவு காட்ட விரும்பவில்லை’ என்று காட்டமாக தெரிவித்தது.

பின்னணி என்ன?: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது. இதுதொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கரோனா, சர்க்கரை நோய், ஆஸ்துமா ஆகியவை நிரந்தரமாக குணமாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிறுவனம் அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டது. இதையடுத்து பதஞ்சலி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, பதஞ்சலி மற்றும் அதன் நிறுவனர்கள் பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பல்வீர் சிங், விபின் ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பிரமாண பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. பாலகிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் எங்கே’’ என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து இருவரும் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.

இந்தச் சூழலில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தனித்தனியே பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறி, பதஞ்சலி நிறுவனம் சாா்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; இந்த தவறுக்காக மிக வருந்துகிறேன். எதிா்காலத்தில் இதுபோல் நிகழாதென உறுதியளிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை மீறும் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை’ என்று ராம்தேவ் குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்