எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம்; இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அச்சம் நிலவுவதால், இந்தியர்கள் யாரும் இஸ்ரேல், ஈரான் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் மோதல் நடந்து வரும் நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக வளாகம் மீது கடந்த 1-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்தது. எனினும், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். அந்த நாட்டுக்கு நாங்கள் உதவி செய்வோம்’’ என்றார்.

இந்நிலையில், எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரித்தார். மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்களும் அந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட் டுள்ளன. அத்துடன், போர் விமானங்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் முக்கிய நகரங்களை விட்டு வேறு எங்கும் பயணம் செய்ய வேண்டாம் என்றும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல், ‘‘இந்தியர்களும் இஸ்ரேல், ஈரான் பயணம் மேற்கொள்ள வேண்டாம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்’’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, ரஷ்யா உட்பட பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE