“அற்புதமான கலந்துரையாடல்...” - கேமிங் பிரபலங்கள் உடனான வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் வீடியோ கேமிங் பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் வீடியோ கேமிங் பிரபலங்களுடன் கடந்த மார்ச் மாதம் நடத்திய கலந்துரையாடல் குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோ கேமிங் பிரபலங்களான தீர்த் மேத்தா, அனிமேஷ் அகர்வால், அன்ஷு பிஷ்ட், நமன் மாத்தூர், மிதிலேஷ் பதங்கர், கணேஷ் கங்காதர், பயல் தாரே ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 18–19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் 1.85 கோடி பேர் வாக்களிக்க பதிவு செய்திருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டும், யூடியூபில் கேமிங் மிகவும் பிரபலமான வீடியோ வகையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மல்டி-பிளாட்ஃபார்ம் சாகச விளையாட்டான ராஜி-யை பிரதமர் மோடி விளையாடினார். மல்டிபிளேயர் சர்வைவல் ராயல் விளையாட்டான ஸ்டம்பிள் கைஸ் என்ற விளையாட்டையும் அவர் விளையாடினார். விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டில், பீட் சேபர் என்ற ரிதம் கேமையும் பிரதமர் மோடி விளையாடினார்.

கேமிங் பிரபலங்கள், இதனை தங்களது தொழிலாக தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, "நாங்கள் 6-7 மணிநேரம் பயிற்சிக்காக செலவிடுகிறோம்" என்று ஒரு ஸ்போர்ட்ஸ் விளையாட்டாளர், பிரதமரிடம் கூறினார்.

கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. அப்போது, "உண்மையான பண விளையாட்டு மற்றும் திறன் அடிப்படையிலான வீடியோ கேமிங் இரண்டையும் பிரிக்க வேண்டும்" என்று அகர்வால், பிரதமரிடம் தெரிவித்தார்.

வீடியோ கேமிங் தொழில் குறித்துப் பேசிய நரேந்திர மோடி, “இதற்கு ஒழுங்குமுறை தேவையில்லை” என தெரிவித்தார். மேலும், வீடியோ கேமிங்கில் இருந்து உண்மையான பண விளையாட்டை பிரிப்பதன் அவசியம் குறித்து எழுத்துபூர்வமாக பரிந்துரைகளை அனுப்புமாறு கேமிங் பிரபலங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். “அற்புதமான கலந்துரையாடல்” என்று கூறி அவர் பகிர்ந்த வீடியோ...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE