பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீநகரில் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர் அகா ரூஹுல்லாவும், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்டாஃப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சி முன்னரே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டப்பேரவைத் தொகுதி பாராமுல்லா மக்களவைத் தொகுதியானது 18 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

பாரமுல்லா, குப்வாரா, பண்டிபோரா, புத்கம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதி பரந்து விரிந்துள்ளது. இந்தத் தொகுதியில் அதிகமாக உள்ள ஷியா முஸ்லிம்களின் ஆதரவை நம்பியே, இங்கு உமர் அப்துல்லா களமிறங்குகிறார். புத்கம், பீர்வா, பட்டான், சோனாவரி, பண்டிபோரா பகுதிகளில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி 10 முறையும், காங்கிரஸ் 4 முறையும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஒருமுறையும் வெற்றி பெற்றது.

2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் முகமது அக்பர் 1,33,426 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக மக்கள் மாநாட்டுக் கட்சியின் ராஜா அய்ஜாஸ் அலி 1,03,193 வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளர் ஷேக் அப்துல் ரஷித் 1,03,168 வாக்குகள் பெற்றார். மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் கய்யூம் வானி 53,530 வாக்குகள் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் அப்துல் ரஷித்தை களமிறக்க அவாமி இத்திகாத் கட்சி (ஏஐபி) முடிவு செய்துள்ளது. ரஷித் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார். மக்கள் ஜனநாயக் கட்சி சார்பில், மாநிலங்களவை எம்.பி. பயாஸ் மிர் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் 2004-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாகப் போட்டியிடுகிறார் உமர் அப்துல்லா. 1998-ல் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் உமர் அப்துல்லா. இதையடுத்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட இளம் எம்.பி. (28 வயது) என்ற பெருமையை உமர் அப்துல்லா பெற்றார்.

அதன் பின்னர் 1999-ல் வெற்றி பெற்று மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2002-ல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உமர். 2002-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் போட்டியிட்ட உமர், தோல்வி கண்டார். பின்னர் 2004 மக்களவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. 2009 முதல் தேசிய அரசியலில் பரூக் அப்துல்லா கவனம் செலுத்தத் தொடங்கியதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பொறுப்பை உமர் கவனித்துக் கொண்டார்.

2009-ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அவர் முதல்வரானார். 2009 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீநகரில் பருக் அப்துல்லா போட்டியிட்டு வெற்றி கண்டார். ஆனால் 2014 தேர்தலில் பரூக் அப்துல்லா தோல்வி கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தாரிக் ஹமீத் கர்ரா வெற்றிபெற்றார்.

2017-ல் அவர் தனது எம்.பி. பதவியை தாரிக் ஹமீத் கர்ரா ராஜினாமா செய்தபோது இடைத்தேர்தலில் போட்டியிட்ட பரூக் அப்துல்லா வெற்றி கண்டார். 2019-லும் பரூக் அப்துல்லாவே வெற்றி பெற்றார். 2022-ல் தொகுதி எல்லை மறுவரையறை செய்தபோது ஸ்ரீநகர், பார முல்லாதொகுதிகளில் இருந்து சில பேரவைத் தொகுதிகள் மாற்றப்பட்டன. ஸ்ரீநகர் தொகுதியில் 19 பேரவைத் தொகுதிகளும், பாரமுல்லா தொகுதியில் 18 தொகுதிகளும் இடம்பெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE