பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் 2 மகள்கள் உட்பட 6 பெண்கள் போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)சார்பில் இம்முறை அதிக பெண்வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர். இவர்களில் மிசா பாரதி, ரோஹிணி ஆச்சார்யா ஆகிய இரு வர் லாலுவின் மகள்கள் ஆவர்.

பிஹாரின் முதல் பெண் முதல்வராக கடந்த 1997, ஜுலை 25-ல் ராப்ரி தேவி பதவியேற்றார். இவரது கணவரான லாலு பிரசாத் தனக்கு பதிலாக முதல்வாக்கினார். அப்போது முதல் பிஹார் அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக லாலு கூறி வருகிறார். இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலில் தனது இரண்டு மகள்களான மிசா பாரதி, ரோஹிணி ஆச்சார்யா உட்பட 6 பெண்களுக்கு லாலு வாய்ப்பளித்துள்ளார்.

பிஹாரில் இண்டியா கூட்டணிக்கு ஆர்ஜேடி தலைமை வகிக்கிறது. இங்குள்ள 40 மக்களவை தொகுதிகளில் ஆர்ஜேடி 23, காங்கிரஸ் 9, இடதுசாரிகள் 5, முகேஷ் சஹாணி கட்சிக்கு3 என தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ஜேடி 22 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் முதல் முறையாக 6 பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் லாலு, தனது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உட்பட 5 பெண்களை போட்டியிட வைத்தார். அப்போது வீசிய மோடி அலையால் இந்த 5 பேரும் தோல்வி அடைந்தனர். 2019 மக்களவைத் தேர்தலில் மனைவி ராப்ரி, மகள் மிசா உட்பட 3 பெண்களை மட்டும் லாலு போட்டியிட வைத்தார். இதிலும் மூவருக்கும் தோல்வி கிடைத்தது. என்றாலும் இந்தமுறை தனது 6 பெண் வேட்பாளர்களுக்கும் வெற்றி நிச்சயம் என லாலு உறுதி கூறுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE