டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவை 3 நாட்கள் காவலில் விசாரிக்கிறது சிபிஐ

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி உள்ள தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, சிபிஐ 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 10 நாட்கள் வரை காவலில்எடுத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர் டெல்லிதிஹார் சிறையில் அடைக்கப்பட் டார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, சிபிஐ அதிகாரிகள் திஹார் சிறையிலேயே வைத்து கவிதாவை விசாரித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் கவிதாவை சிறையிலேயே கைது செய்ததாகவும் சிபிஐ அறிவித்தது. இதனிடையே, நேற்று சிபிஐ அதிகாரிகள், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கவிதாவை ஆஜர்படுத்தினர். அப்போது 5 நாட்கள் வரை கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். வாதத்தின்போது கவிதாமீது பல குற்றச்சாட்டுகளை சிபிஐ நீதிமன்றத்தில் அடுக்கியது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா ஒரு முக்கிய புள்ளி. இவர் இந்த முறைகேடு வழக்கில் ரூ. 100 கோடி வழங்கி உள்ளார். அரபிந்தோ பார்மா நிறுவனத்தை நடத்தி வரும் சனத் சந்திரா ரெட்டி என்பவர், கவிதா ஜாக்ருதி அமைப்புக்கு ரூ. 80 லட்சம் வழங்கி உள்ளார். மேலும், பணத்துக்காக சனத் சந்திரா ரெட்டியை கவிதா மிரட்டி உள்ளார்.

இதுதவிர ஒவ்வொரு சில்லறைவியாபார (ரீடெய்ல் ஜோன்) கடைக்கும் ரூ. 5 கோடி வீதம் மொத்தம் 5 கடைகளுக்கு ரூ. 25 கோடியும் வழங்கிட வேண்டுமெனவும் சனத்சந்திரா ரெட்டியை கவிதா மிரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளரான விஜய் நாயர் என்பவருக்கு கவிதாதான் ரூ. 100 கோடி வழங்கி உள்ளார் எனவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து சிபிஐ நீதிமன்றம், கவிதாவை 3 நாட்களுக்கு, அதாவது வரும் 15-ம் தேதி காலை வரை விசாரிக்கலாம் என்றும், காலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE