தேர்தல் பிரச்சாரத்துக்காக இடைக்கால ஜாமீன்: டெல்லி கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மனு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் அரசியல் களம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, இரு தினங்களுக்கு முன்பு டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இவை கேஜ்ரிவாலுக்கு சற்று பேரிடியாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது.

அதோடு, கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்று டெல்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா ராஜினாமா செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE