மாநகராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட தடை இல்லை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘அரசியல்சாசன விதிமுறைப்படி மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தடை இல்லை. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது நியாயமானதுதான், தன்னிச்சையானது அல்ல ’’ என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையயடுத்து அங்கீகரக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தை வழங்கும் விதிமுறைகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதில் மாநகராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் இல்லாமால் மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தின்படி, மாநகராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரம், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். அரசியல் சாசன விதிமுறைப்படி, மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தடை இல்லை. மாநகராட்சி தேர்தலில் , அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது நியாயமானதுதான். தன்னிச்சயைானது அல்ல.

இந்தியாவில் முதல் பொது தேர்தல் நடைபெற்றபோது, பெரும்பாலான வாக்காளர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அதனால் வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய தேர்தல் சின்னங்கள் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. தேர்தல் சின்ன விதிமுறைப்படிதான், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களை வழங்குகிறது. இது அதிகார வரம்பு மீறல் அல்ல. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE