“மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்” - மம்தா பானர்ஜி பேச்சு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவுவேடு (என்சிஆர்), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மசூதி ஒன்றில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டுக்காக நாம் ரத்தம் சிந்தத் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டின் பெயரில் யாரும் சித்ரவதை செய்யப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன். உங்கள் பாதுகாப்பு, உங்கள் வாழ்க்கைக்காக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஒரு போதும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்.

தேர்தல் சமயத்தில் பாஜக முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன் அவர்களுக்கு எதுவும் வேண்டாம். அன்பு மட்டுமே போதும் என்று. தேர்தல் நேரத்தில் சிலர் கலவரத்தை உருவாக்க முயல்வார்கள். சதிக்கு இரையாகி விடாதீர்கள். டெல்லியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவருமான அபிஷேக் பானர்ஜியும் பாஜகவை தாக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த மண்ணின் ரத்தத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாமும் கலந்துள்ளது. இது யாருக்கும் சொந்தமானது இல்லை. சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. மேலும், பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் நீண்ட கால திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்