“பல நூற்றாண்டு தியாகத்தின் உச்சம் அயோத்தி ராமர் கோயில்” - பிரதமர் மோடி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “அயோத்தி ராமர் கோயில் பல நூற்றாண்டு கால விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் உச்சம். இந்தியாவின் தேசிய உணர்வில் பகவான் ஸ்ரீராமரின் பெயர் பதிந்துள்ளது.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கை தளமாகக் கொண்ட நியூஸ் வீக் பத்திரிகைக்கு பிரதமர் மோடி நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் ராமர் கோயில், சீனா விவகாரம், பாகிஸ்தான் என பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பிரதமர் மோடி ராமர் கோயில் குறித்து கூறுகையில், “பகவான் ஸ்ரீராமரின் வாழ்க்கை நமது நாகரிகத்தின் எண்ணங்களின், மதிப்புகளின் வரையறைகளை அமைத்துள்ளது. இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் பகவான் ஸ்ரீராமரின் பெயரே எதிரொலிக்கிறது.

ராமர் கோயில் திறப்புக்கு முன்னதாக நான் கடைபிடித்த 11 நாட்கள் சிறப்பு விரதத்தின்போது ஸ்ரீராமரின் பாதத் தடங்கள் பதிந்த இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டேன். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லும் வகையில் அமைந்த அந்த பயணத்தின் மூலம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஸ்ரீ ராமருக்காக வைத்திருக்கும் மரியாதைக்குரிய இடம் வெளிப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் பல நூற்றாண்டுகளின் விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் உச்சம். இந்தியாவின் தேசிய உணர்வில் பகவான் ஸ்ரீராமரின் பெயர் பதிந்துள்ளது. ஸ்ரீராமர் தான் பிறந்த இடத்துக்குத் திரும்பியது தேச ஒற்றுமையின் வரலாற்றுத் தருணம். கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும்படி என்னைக் கேட்டபோதே 140 கோடி மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று எனக்குத் தெரியும்.

ராம் லல்லாவின் வருகையை காண பல நூற்றாண்டுகளாக இந்திய மக்கள் பொறுமை காத்திருந்தனர். மங்களகரமான பிரான் பிரதிஷ்டை நிகழ்வுக்கு முந்தைய 11 நாட்களில், எண்ணற்ற பக்தர்களின் விருப்பங்களை, ஆசைகளை நான் என்னுடன் சுமந்து சென்றேன். பிரான் பிரதிஷ்டைக்கான தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, இரண்டாவது தீபாவளியைப் போன்று கொண்டாட்டமாக தேசத்தை ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒளி வீசியது. அது ராம் ஜோதியின் ஒளி. 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் கும்பாபிஷேக விழாவை அனுபவிக்க முடிந்ததை தெய்வீக ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சீனா குறித்து... "இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழ்நிலையை தவிர்க்க, எல்லை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்திய எல்லையில் நீடித்து வரும் சூழல் அவசரமாக தீர்க்கப்பட வேண்டும். அப்போதே இருதரப்புகளின் இடையிலான தொடர்புகள் இயல்பாக இருக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான மற்றும் அமைதியான உறவுகள் நீட்டிப்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஆசிய பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் மிக முக்கியமானது.

ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இரு தரப்பு ஈடுபாடுகள் மூலம் எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்."

பாகிஸ்தான் குறித்து... "பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழ்நிலையிலேயே அமைதியை மேம்படுத்த முடியும் என்பதே எப்போதும் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து எதுவும் கூறவில்லை. பாகிஸ்தானின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன்."

ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 குறித்து... "நானோ அல்லது மற்றவர்களோ சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். தற்போது ஜம்மு காஷ்மீர் மண்ணில் நிகழ்ந்துள்ள நேர்மறையான மாற்றங்களை நீங்களே நேரில் சென்று காணுங்கள்.

கடந்த மாதம் தான் நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். முதன்முறையாக, அம்மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதை என்னால் காண முடிந்தது. வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய செயல்முறைகள் ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்துவதை காண வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியின் பலனை தற்போது அறுவடை செய்து வருகிறார்கள். இதற்கு சான்று தான் 2023ம் ஆண்டு 21 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தது. மேலும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்த பந்த், கல் வீச்சு சம்பவங்கள் இப்போது கடந்த கால விஷயமாக மாறிவிட்டன." இவ்வாறு அந்த நேர்காணலில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்