நவராத்திரி நாளில் வறுத்த மீன் சாப்பிடலாமா? - விமர்சனத்துக்கு உள்ளான தேஜஸ்வி யாதவ்

By செய்திப்பிரிவு

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்துக்காக, ஹெலிகாப்டரில் பறந்து கொண் டிருக்கும்போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் ராம நவமியையொட்டி கொண்டாடப்படும் நவராத்திரி நாளில் மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவை, பாஜக மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிஹாரில் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் நாள் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் மீன் சாப்பிடும் வீடியோவை தேஜஸ்வி பகிர்ந்ததை குறிப்பிட்டு அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்காக சனாதனி வேடம் பூண்டுள்ளதாகவும், மற்ற நேரங்களில் சனாதன தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறும்போது, “தேஜஸ்வி யாதவ் ஒரு சீசன் சனாதனி என்று சொல்லலாம். அவரது தந்தை (லாலு பிரசாத் யாதவ்) ஆட்சியில் இருந்தபோது ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேச நாட்டவர் பிஹாருக்குள் ஊடுருவினர். அவர்கள் சனாதன முகமூடி அணிந்து சமரச அரசியல் செய்கின்றனர்” என்றார்.

மேலும், பாஜக தலைவரும், பிஹார் துணை முதல்வருமான விஜய் சின்ஹா கூறும்போது, “ஒரு சிலர் தங்களை சனாதனத்தின் மகனாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மதிப்புகளை அவர்கள் காப்பாற்றுவதில்லை” என்றார்.

இந்நிலையில் அவர்களது விமர்சனத்துக்கு தேஜஸ்வி யாதவ் நேற்று விளக்கம் அளித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் அந்த வீடியோவை நேற்று முன்தினம் பகிர்ந்திருந்தாலும், உண்மையில் அவர் மீன் சாப்பிட்டது நவராத்திரிக்கு முந்தைய நாளான ஏப்ரல் 8-ம் தேதிதான் என்று அந்த விளக்கத்தில் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE