“இந்தியா - சீனா இடையிலான உறவு முக்கியமானது” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா - சீனா இடையிலான விரிசல்கள் குறித்து பேசியுள்ளார். அதில் பிரதமர் கூறியதாவது: “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் தனித்துவமானது. இருதரப்பு உறவில் உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கு, எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது. ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம், நமது எல்லைகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அண்மையில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால் இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE