ஆந்திராவிலிருந்து கர்நாடகா சென்ற தனியார் பஸ்ஸில் ரூ.120 கோடி கடத்தல்: சந்தேகம் வராமலிருக்க புடவை பெட்டியில் கட்டுக்கட்டாக பணம்

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து நேற்று பெங்களூரு சென்ற ஒரு தனியார் பஸ்ஸை கர்நாடக மாநில எல்லையில் போலீஸார் சோதனையிட்டதில், கட்டுக்கட்டாக ரூ.120 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. நடைபெற உள்ள கர்நாடக மாநில தேர்தலில் இந்த பணம் சட்டவிரோதமாக விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படுகிறதா? எனும் கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து நேற்று காலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ் எனும் தனியார் பஸ், பெங்களூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்நாடக மாநில எல்லையான சிக்பலாப்பூர் மாவட்டம், திப்பகானிஹல்லி எனும் பகுதியில், போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த பஸ்ஸையும் போலீஸார் சோதனையிட்டனர். ஒரு இருக்கையின் கீழ் இருந்த 2 அட்டைப்பெட்டி, மற்றும் ஒரு துணிப்பையை போலீஸார் சோதனையிட அவைகளைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அனைத்தும் 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள். அவை புடவைகளின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பணக்கட்டுகளை அங்கேயே எண்ணி பார்த்ததில் ரூ. 120 கோடி பணம் ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால் இந்த பெட்டிகளை யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. ஆதலால், போலீஸார் அந்த பணத்தைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE