“உங்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு நாங்கள் மறு பெயரிடலாமா?” – சீனாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “உங்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு நாங்கள் மறு பெயரிடலாமா?” என சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வைத்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் இடங்களுக்குப் பெயர் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.

நான் சீனாவைப் பார்த்துக் கேட்கிறேன்... நீங்கள் செய்வதைப் போல், நாங்களும் உங்கள் நாட்டின் பகுதிகளுக்கு பெயர் வைக்கலாமா? அவ்வாறு பெயர் வைப்பதால் அது எங்கள் நாட்டின் பகுதியாக ஆகிவிடுமா? இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், எங்கள் சுயமரியாதைக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கான திறன் எங்களிடம் இருக்கிறது” என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும், சீனாவின் ஒரு பகுதி என்றும் சீனா உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கான பெயர்களை சீனா புதிதாக வைத்தது. இதற்கு இந்தியா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்வாறு பெயர் வைப்பதால் அந்த பகுதிகள் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது என்றும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியா தரப்பில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் ஓர் அங்குல நிலப் பகுதியைக்கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE