“அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்” - விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பது தொடர்பான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா மாற்றியது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து பிரதமர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இனியும் இருக்கும்.

இன்று, வளர்ச்சிப் பணிகள் அருணாச்சல பிரதேசத்தையும் வடகிழக்கு பகுதிகளையும் சூரியனின் முதல் வெளிச்சத்தைப் போல, முன்னெப்போதையும் விட வேகமாக சென்றடைகின்றன. கடந்த மாதம் ‘வளர்ந்த இந்தியா, வளர்ந்த வடகிழக்கு’ நிகழ்ச்சிக்காக அருணாச்சலின் இடாநகர் பகுதிக்குச் சென்றிருந்தேன். அப்போது வளர்ந்த வடகிழக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ரூ.55,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 35,000 குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. மேலும் 45,000 குடும்பங்கள் குடிநீர் விநியோகத் திட்டத்தால் பயனடைந்துள்ளன. சுமார் 125 கிராமங்களுக்கு புதிய சாலைத் திட்டங்களையும், 150 கிராமங்களில் சுற்றுலா மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களையும் தொடங்கியுள்ளோம்.

வடகிழக்கு பகுதிகளில், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ரூ.10,000 கோடி மதிப்பிலான UNNATI திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. சீனாவால் மறுபெயரிடப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு துண்டு நிலம் ஆகியவை அடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE