“மக்கள் நிலத்தை அபகரித்து அதானி போன்றோருக்கு அளித்தது பாஜக” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை மேற்கொள்காட்டி மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மத்தியப் பிரதேசம் சியோனி மாவட்டத்தில் உள்ள தனோராவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், “பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதுபோல மூன்று முதல் நான்கு வரையிலான புரட்சிகரமான நடவடிக்கைகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணத்தை இரட்டிப்பாக்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத இளைஞரும் அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு வருட பயிற்சி பெறுவதை உறுதி செய்ய புதிய சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். இதன்மூலம் அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். பயிற்சி முடித்த பிறகு, சிறப்பாக செயல்பட்டால், அதே இடத்தில் வேலை கிடைக்கும்.

மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு ஒப்பந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அரசுத் துறையில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாயிகள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பழங்குடியினர் மசோதா, உங்கள் உரிமைகளை உங்களுக்கு வழங்குவதற்காக நில உரிமைச் சட்டங்கள் போன்ற சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம்.

இந்திரா காந்தியும், காங்கிரஸ் அரசும் உங்கள் நிலத்தையும் அதன் உரிமையையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்தது. அதேசமயம், பாஜக உங்கள் நிலத்தை அபகரித்து அதானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுத்துள்ளது. இதுதான், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.

நமது நாட்டில் இரண்டு இந்தியா உள்ளது. ஒன்று கோடீஸ்வரர்களுக்கானது, அவர்களுக்கு எந்தக் கனவையும் காண உரிமை உள்ளது. மற்றொன்று வேலை வாய்ப்பு அல்லது சரியான கல்வியைப் பெற முடியாத ஏழை இந்தியர்களுக்கானது. எனவே இந்த நாட்டை மாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார் ராகுல் காந்தி.

மாண்ட்லா தொகுதியில், தற்போதைய எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஃபக்கன் சிங் குலாஸ்தேவுக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓம்கார் சிங் மார்க்கம் களமிறங்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE