செய்தித் தெறிப்புகள் @ ஏப்.6: இந்தியா Vs பாக். கருத்து மோதல் முதல் ‘தேர்தல் களத்தில் சீன சதி’ வரை

By செய்திப்பிரிவு

“பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை அழிப்போம்” - ராஜ்நாத் சிங்: “இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதனை கடுமையாக கண்டித்துள்ள பாகிஸ்தான், “இந்தியாவின் ஆளும் ஆட்சியானது அதிக தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காக வெறுப்பூட்டும் சொற்களைப் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக இத்தகைய சொற்களை நியாயமற்ற முறையில் பயன்படுத்துகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நல பாதிப்பால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 71. புகழேந்திக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

“நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், புகழேந்தி நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்துக்கும் மட்டுமின்றி, திமுகவுக்கு பேரிழப்பாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்”: இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார். அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், மோடி பிரதமராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த ஆட்சி இருந்தாலும் அல்லது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 142 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு, நிச்சயமாக 3-வது இடத்துக்கு முன்னேறும்.

2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபோது உலக பொருளாதாரத்தில் 12-வது இடத்தில் இருந்த இந்தியா, 2014-ல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபோது 7-வது இடத்துக்கு முன்னேறியது. பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 7-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், 4 சதவீதம் என்ற குறைந்தபட்ச வளர்ச்சி விகிதம் இருந்தால்கூட இந்தியா 5-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு உயரும். இதையெல்லாம் தங்களின் சாதனையாக பாஜகவினர் கூறுவது அபத்தமானது"என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வாக்குறுதி: “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்… நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

எனவே, “திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியுடன் ஆதரவு கோரியுள்ளார்.

திமுக - காங். கூட்டணி மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்: வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து சனிக்கிழமை பிரச்சாரம் செய்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என்று கூறுகிறது. ஆனால், திமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு அவர்களால் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“சிஏஏ குறித்து காங்கிரஸ் கள்ள மவுனம்” - பினராயி விஜயன்: “காங்கிரஸும் அதன் தலைமையும் சிஏஏ குறித்து கள்ள மவுனம் காத்து வருகின்றன. அதன் காரணமாகவே, அதன் தேர்தல் அறிக்கையில் சிஏஏவை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

இண்டியா கூட்டணி தலைவர்கள் மீது மோடி விமர்சனம்: “இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒரே நோக்கம், கமிஷன் வாங்குவதற்கான வழிகளைத் தேடுவதுதான். அதேநேரத்தில், நாட்டை முன்னேற்றுவது என்ற ஒரே நோக்கத்தோடு இருக்கக் கூடிய கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகும்” என்று உத்தரப் பிதேச பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினா.

“ஜனநாயகத்தை மோடி சிதைக்கிறார்” - சோனியா காந்தி: “இந்த நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர். இன்று நம் நாடும், நம் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயக அமைப்புகளும் சிதைக்கப்படுகின்றன. நம் அரசியல் சாசனத்தை மாற்ற சதி செய்யப்படுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி சவால்: “அரசியல் ரீதியாக ஆம் ஆத்மியை எதிர்கொள்ள விரும்பினால் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னால் ஒளியாமல் நீங்கள் செய்த பணிகளைச் சொல்லி தேர்தலை சந்தியுங்கள்” என்று பாஜகவுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி சவால் விடுத்துள்ளார்.

‘ஏஐ மூலம் இந்தியத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி’ - மைக்ரோசாஃப்ட்: ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா வெள்ளோட்டம் பார்த்ததை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான அரசியல் விளம்பரங்கள், டீப் ஃபேக் படங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் வாக்காளர்களை திசைதிருப்பும் என்று இந்திய தேர்தல் குறித்து மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 அதிகரிப்பு: சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை ஒரே நாளில், பவுனுக்கு ரூ.840ம் உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கு விற்பனையானது, ஒரு பவுன் ரூ.52,920 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

“கர்நாடக காங். அரசு முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும்”: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என பாஜக தலைவர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் (காங்கிரஸ்) 136 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.பாஜகவைவிட காங்கிரஸ் 7% வாக்குகளை கூடுதலாகப் பெற்றது. அந்தக் கூட்டணியில் இருந்து பலர் விரைவில் காங்கிரஸில் இணைவார்கள். 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். எங்கள் அரசு தனது முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும். காங்கிரஸின் திட்டங்கள் 5 ஆண்டு காலத்துக்கு தொடரும்” என்று தெரிவித்தார்.

‘காங். தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது ’’ - பிரதமர் மோடி: “சுதந்திரப் போராட்டத்தின்போது இருந்த காங்கிரஸ், பத்தாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸில் பல முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி காங்கிரஸில் இருந்தார். இன்று எஞ்சியிருக்கும் காங்கிரஸிடம் தேச நலனுக்கான கொள்கைகளோ, தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையோ இல்லை. இன்றைய காங்கிரஸ், இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகளிலும், விருப்பங்களிலும் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நிரூபித்துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

“பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறை கவலை அளிக்கிறது” - நிர்மலா சீதாராமன்: “பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் நியாயமற்ற முறையில் இருந்தாலும் இண்டியா கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும்”: “எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்பட்டு மக்களவைத் தேர்தல் நியாயமற்ற முறையில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் 5 நியாயங்கள், 25 வாக்குறுதிகளுக்கான மக்களின் பதிலால் இண்டியா கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE