“ராமர் பெயரில் மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சி” - கன்னையா குமார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பாஜக கடவுள் ராமர் பெயரைக் கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. நாதுராமின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் அஜெண்டாவை பரப்புகிறது பாஜக” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “காந்தி - நேரு குடும்பத்தின் பங்களிப்பை சிறுமைப்படுத்த முயற்சி நடக்கிறது. குடும்ப அரசியலை விட தனி மனித ஆட்சிதான் மிகவும் மோசமானது. இந்து மதத்தின் மகத்துவத்தை குறைக்க பாஜக முயற்சிக்கிறது. அதோடு ராமரின் கருத்தில் யாருக்கும் வெறுப்பு இல்லை. நாட்டில் ராமர் அலை வீசினால் தவறில்லை, ஆனால் நாட்டில் நாதுராம் அலை வீசினால்தான் தவறு.

பாஜக ராமர் பெயரைக் கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. நாதுராமின் (நாதுராம் கோட்சே) வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் அஜெண்டாவை பரப்புகிறது பாஜக. ராமரை நம்புபவர்களை எப்படி ஏமாற்றுவது என்பதில்தான் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இந்து மதத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்குள் அடக்கிவிட முடியாது. இந்து மதத்தில் உள்ள எல்லா கடவுள்களும் முக்கியமானவர்கள். சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைப் போல ராமரும் முக்கியமான ஒருவர். இந்து மதத்தை அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.

ராமாயணத்தில் துளசிதாஸின் ராமாயணம், வால்மீகியின் ராமாயணம் என்று பல வித்தியாசமான கதைகள் உள்ளன. இந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாறு ராமருடன் தொடர்புடையது. நாதுராமின் வகுப்புவாதமும், பிரித்தாளும் தன்மையும் ஓர் அரசியல் தந்திரமாக பரப்பப்படுகிறது. இது ஆபத்தானது.

காங்கிரஸை குடும்ப கட்சி என விமர்சிக்கிறார்கள். ஆனால் நாட்டின் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களது உயிரையே இழந்திருக்கிறார்கள். நேரு 15 வருடங்கள் தனது வாழ்நாளை சிறையில் கழித்துள்ளார். நேரு, மோதிலால் நேருவின் மகன் என்ற காரணத்தினால் மட்டும் நாட்டின் தலைவரானார் என கூற முடியாது.

எண்ணற்ற நல்ல விஷயங்களை காங்கிரஸ் நாட்டுக்காக செய்திருக்கிறது. குடும்ப அரசியல் விவகாரத்தில் காங்கிரஸை மட்டும் குற்றம்சாட்டும் பாஜக, தனது கட்சிக்குள் நடக்கும் குடும்ப அரசியலை பெரிதாக கருதுவதில்லை. பாஜக தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், அனுராக் தாக்குர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எந்தக் கணக்கில் வருவார்கள்?

நான் பெகுசராய் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால் அந்தத் தொகுதிக்கு கூட்டணி கட்சியான சிபிஐக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து தொகுதிகளையும் என்னுடைய தொகுதியாகவே கருதுகிறேன்” என்றார் கன்னையா குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE