தேர்தல் திருவிழா சுவடுகளின்றி ‘பேரமைதி’ நிலவும் மணிப்பூர் பிரச்சாரக் களம் எப்படி?

By செய்திப்பிரிவு

இம்பால்: மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பேரணிகள், முக்கிய தலைவர்களின் பரபரப்பான பிரச்சாரங்கள் என்ற வழக்கமான தேர்தல் பரபரப்புகளின்றி மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றது இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர்.

தேர்தல் திருவிழாவுக்கு இந்தியாவே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதை மாநிலத் தேர்தல் அதிகாரிகளால் வைக்கப்பட்டிருக்கும் போஸ்டர்கள் மட்டுமே பறைசாற்றுகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை பாஜகவும், ராகுல் காந்தி, கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் தங்களுடைய பிரச்சாரத்துக்காக முன்னிறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இவர்களில் யாரும் பிரச்சாரத்துக்காக மணிப்பூருக்கு இன்னும் செல்லவில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக் கலவரத்தின் எதிரொலியாக, அங்கு செல்வதையும், பிரச்சாரம் மேற்கொள்வதையும் தலைவர்கள் தவிர்த்தே வருகின்றனர். இதனிடையே, மாநிலத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று மணிப்பூர் மாநிலத் தேர்தல் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மணிப்பூர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் ஜா கூறுகையில், "அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் அனைத்து பிரச்சாரங்களுக்கும் அனுமதி உண்டு" என்றார்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சூழலை சமாளிக்க அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் புதிய யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். பாஜகவின் தவுனோஜம் பசந்தா குமார் சிங், காங்கிரஸ் கட்சியின் அங்கோம்சா பிமோல் அகோஜம், இந்திய குடியரசு கட்சியின் மகேஷ்வர் தவுனோஜம் மற்றும் மணிப்பூர் மக்கள் கட்சியின் (எம்பிபி) ராஜ்முகர் சோமேந்ரோ சிங் ஆகியோர் பாரம்பரிய தேர்தல் முறையைத் தவிர்த்து, தங்களின் வீடுகள் அல்லது கட்சி அலுவலகங்களில் கூட்டங்கள் நடத்துவது, ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்காளர்களைச் சந்தித்தும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இது குறித்து இந்திய குடியரசு கட்சியின் மகேஸ்வர் தவுனோஜம் கூறுகையில், "பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்றாலும் நான் எனது பிரச்சாரத்தை குறைந்த அளவிலேயே திட்டமிட்டுச் செய்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் வாக்காளர்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தையும், தங்களின் தேர்வு குறித்தும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்" என்கிறார். தனது ஆதரவாளர்களை குழுக்களாக பிரித்து வீடு வீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மாநிலக் கல்வி மற்றும் சட்ட அமைச்சரும், தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவருமான பசந்தா குமார் சிங் தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் சின்னச் சின்ன கூட்டங்களை நடத்தி வருகிறார். அதேவேளையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், காங்கிரஸ் வேட்பாளருமான அகோய்ஜம் பெரும்பாலும் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கிறார்.

இந்தப் புதிய மவுனச் சூழல் குறித்து மாநில பாஜக தலைவர் ஏ.சார்தா தேவி கூறுகையில், "தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் என்றாலும், மக்களின் காயங்களில் நாங்கள் வெந்நீர் ஊற்ற முடியாது. தேர்தல் என்பது திருவிழா போன்றதுதான். ஆனாலும் நாங்கள் அதனை தற்போதைய சூழலில் கொண்டாட முடியாது. மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து தள்ளி வாழ்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால், நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை" என்றார்.

இந்த நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "தற்போது சூழல் கட்டுக்குள் இருப்பதாக தோன்றினாலும், பெரிய அளவில் செய்யப்படும் பிரச்சாரங்களால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. அந்த ஆபத்தான முயற்சியை எடுக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை" என்றார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26 என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வேட்பாளர்கள் யாரும் வந்து தங்களை வந்து இதுவரை பார்க்கவில்லை என்ற வேதனை மக்களிடம் உள்ளது.

"சில கட்சிகளின் தொண்டர்கள் ஓரிரு முறை வந்து பார்த்துள்ளனர். வேட்பாளர்கள் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை. அப்படி வந்து பார்த்தால்தான் முகாம்களில் நாங்கள் வாழ்கிறோம் என்பது புரியும்" என்றார் டிமா. இரண்டு குழந்தைகளின் தாயாரான இவர், குழந்தைகளுடன் மைதேயி பகுதிகளில் உள்ள நிவாரண முகாமில் வசித்து வருகிறார்.

குகிகள் அதிகம் வசிக்கும் மோரே, சுராசந்பூர் பகுதிகளிலும் இதுபோன்ற சூழலே நிலவி வருகிறது. இதனிடையே, சில குகி பிரிவுகளும், சமூகக் குழுக்களும் இந்தத் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன.

மைதேயி மக்கள் அதிகம் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதி நிலவி வரும் வேளையில், கடைகளும் வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மக்கள் எதிர்கொள்ளும் பதற்றத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில், மந்தமான இந்தத் தேர்தல் சூழ்நிலை மாநிலத்தின் அமைதிக்கான எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது.

முன்னதாக, கடந்த 2023 மே 3-ம் தேதி தொடங்கிய மைதேயி, குகி இன மக்களுக்கு இடையிலான இனக் கலவரத்தில் 219 பேர் உயிரிழந்தனர். 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்