“சிஏஏ குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காக்கிறது” - பினராயி விஜயன் கண்டனம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கள்ள மவுனம் காப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிஏஏ சட்டத்தை அகற்றுவோம் என எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம். சிஏஏ மட்டுமல்லாது, பணமோசடி தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கொடூர சட்டங்களையும் அகற்றுவதற்கான வாக்குறுதியை சிபிஎம் அளித்துள்ளது.

சிஏஏ சமூகத்தை பிளவுபடுத்துகிறது. நமது நாட்டின் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், காங்கிரஸும் அதன் தலைமையும் சிஏஏ குறித்து கள்ள மவுனம் காத்து வருகின்றன. அதன் காரணமாகவே, அதன் தேர்தல் அறிக்கையில் சிஏஏவை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை.

சிஏஏ மற்றும் பிற கொடூர சட்டங்கள் மீதான காங்கிரஸின் மவுனம், சங்பரிவாரின் இந்துத்துவா திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் தீவிரமாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. சிஏஏ விவகாரத்தை காங்கிரஸ் தவிர்த்திருப்பது திட்டமிடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ பாஜக ரத்து செய்தது. மத்திய அரசின் அந்த முடிவை காங்கிரஸ் எதிர்க்கத் தவறியது.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், எந்த ஒரு தொகுதியிலும் பாஜக இரண்டாவது இடத்தில் கூட வராது. கேரளாவில் வகுப்புவாதத்தை வேரூன்ற இடது ஜனநாயக முன்னணி அனுமதிக்காது. சங்பரிவாரை முழு பலத்துடன் எதிர்ப்போம். அவர்களை மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றப் பாடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

பாஜக கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன? பாஜக அரசு நிறைவேற்ற முற்படும் காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள் என்னென்ன? எவையெல்லாம் மாற்றப்படும், நீக்கப்படும், திருத்தப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளது? - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீதான விரைவுத் தொகுப்பை வாசிக்க > பாஜக சுவடுகளுக்கு ‘குறி’, மாநிலங்களை ‘கவரும்’ உத்தி... - காங்கிரஸ் வாக்குறுதிகள் சொல்வது என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE