முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்தான்: நடிகை கங்கனா ரனாவத்தின் பேச்சால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் முதல் பிரதமர்சுபாஷ் சந்திர போஸ்தான். நேரு அல்ல என்று பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் பேசிய வீடியோவின் அந்தப் பகுதியை மட்டும், எடுத்து அதை சமூக வலைதளங்களில் சிலர்வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அதைப் பார்த்த பலரும் கங்கனாவை விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகை கங்கனா கூறியதாவது:

எனக்கு இந்த விஷயத்தை முதலில் தெளிவாக்குங்கள். நாம் சுதந்திரம் பெற்றபோது நாட்டின் முதல் பிரதமரான சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றிருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவரைப் பேட்டி எடுத்தவர், நாட்டின் முதல் பிரதமர் நேரு என்று சரி செய்ய முயன்றபோது நடிகை கங்கனா ரனாவத் அவரைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை கங்கனாவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர்தான் சுபாஷ் சந்திரபோஸ். அவர் நாட்டின் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரஸில் பணியாற்றியபின் 1939-ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

சுதந்திர இந்தியாவின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேரு. பள்ளிசெல்லும் சிறு குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் நடிகை கங்கனாவை கேலி செய்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள், நடிகை கங்கனாவை கேலி செய்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, என்ன ஒரு அவமானம். உச்சபட்ச ஜோக்கர்தான் இந்தக் கட்சியின் கோமாளிகள். இவர்கள் தான் மகாபிரபுவின் ஆஸ்தான விதூஷகர்கள்” என்று ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் பலரும் கங்கனா ரனாவத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE