புதுடெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையுமானால் நாட்டின் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப.சிதம்பரம், “இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சம் ‘நீதி’. கடந்த 10 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வகையான நீதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது, பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது, சில விஷயங்களில் மறுக்கப்பட்டுள்ளது.
2019 தேர்தலின்போது, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்தோமோ அவையெல்லாம் நடந்துள்ளன. இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசு அமைப்புகள் பலவீனப்படுத்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் எனக் கூறினோம். அது நடந்திருக்கிறது. சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்; பலர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறினோம். அதுவும் நடந்தது. எளிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் எனக் கூறினோம். அதுவும் நடந்தது.
நாடாளுமன்றம் பலவீனப்படுத்தப்படும் எனச் சொன்னோம்; அதுவும் நடந்தது. நாட்டில் எதேச்சதிகாரம் தலைவிரித்தாடும் என எச்சரித்தோம். தற்போது, இந்தியாவில் எதேச்சதிகாரம் தலைவிரித்தாடுவதாக உலகின் பல சிந்தனையாளர்கள் கூறி இருக்கிறார்கள். நாம் என்ன அனுமானித்தோமோ அவை நடந்ததற்காக நாம் மகிழவில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நோக்கில் பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கை வேலை, வளம், நலத்திட்டம் எனும் 3 சக்திவாய்ந்த வார்த்தைகளைக் கொண்டுள்ளது.
வேலை என்றால், நாம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ, இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஐஐடியில் படித்து வெளியேறிய மாணவர்களில் 30% பேர் வேலை கிடைக்காமல் உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. வேலைக்கான அழுகை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்ததாக வளம். வளத்தை பகிர்வதற்கு முன்பாக நாம் அவற்றை உருவாக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் சம்பள உயர்வு நிகழவில்லை; தேங்கிப் போய்விட்டது. நாட்டின் அடித்தட்டில் இருக்கக்கூடிய 50% மக்களின் வருவாய் ஒன்று தேங்கிவிட்டது அல்லது குறைந்துவிட்டது. எனவே, நாம் வளத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி உருவாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் 8.5% வளர்ச்சி உருவாக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.5% ஆக இருந்தது. நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் சராசரி வளர்ச்சி 5.9% மட்டுமே.
நாட்டில் வளத்தை உருவாக்க அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படும். தனியார் முதலீடுகள், அரசு முதலீடுகள், அந்நிய முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் வளம் பெருமளவில் உருவாக்கப்படும். அதன்மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும். வளத்தை உருவாக்கி வேலை வாய்ப்புகளை பெருக்கினால் நாடு வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். நாடு வளர்ச்சி பெரும்போது மக்கள் நலத்திட்டங்களை அதிக அளவில் மேற்கொள்ள முடியும். பல்வேறு வகையான நீதிகள் மக்கள் நலத்திட்டங்களில்தான் இருக்கின்றன.
நரேந்திர மோடி அரசு மீது நான் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு, இது பணக்காரர்களுக்கான ஆட்சி என்பதே. நாட்டில் உள்ள ஒரு சதவீத வசதிபடைத்தவர்களுக்காக இந்த அரசு செயல்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடித்தட்டில் உள்ள 50% மக்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளும். தற்போது நாட்டில் 23 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்போது, அடுத்த 10 ஆண்டுகளில் 23 கோடி ஏழைகளையும் ஏழ்மை நிலையில் இருந்து கைதூக்கிவிடும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் வாக்குறுதிகள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையாக வாசிக்க > மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago