இந்தியாவுக்கு அவப்பெயர் உண்டாக்கியது காங்.: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஜமுய்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு அவப்பெயர் மட்டுமே கிடைத்ததாக பிஹார் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பிஹாரில் முதன்முதலாக ஜமுய் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலகளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் மட்டுமே கிடைத்தது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு, மகதப் பேரரசின் புராதனப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் பலனாக, தற்போது உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு நல்லபெயர் கிடைத்து வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட ஊழல் கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி என்மீது தகாத வார்த்தைகளை வீசி வருகின்றனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு வேலைக்காக நிலத்தை லஞ்சமாக பெற்றவர். ஆனால், எங்கள் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் (பிஹார் முதல்வர்) ரயில்வே அமைச்சராக இருந்தபோது களங்கமற்ற வகையில் செயல்பட்டு பல சாதனைகளை படைத்தவர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பின்போது ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அவதூறுகளை அள்ளி வீசின. பழங்குடியினப் பெண்ணை (திரவுபதி முர்மு) குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவிடாமல் தடுத்தது.

40 தொகுதியிலும் வெற்றி: இதனை உணர்ந்து மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வரவேண்டும். பிஹார் மாநிலத்தில் 40 மக்களவை தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் 400-க்கும் அதிகமான இலக்கை அடைய வேண்டும் என்ற எங்களின் பக்கம் மக்கள் நிற்க முடிவு செய்துவிட்டதை இந்த பெருந்திரள் கூட்டத்தின் உற்சாகம் உணர்த்திவிட்டது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

பிஹாில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில், பிரதமருடன், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா,லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவர்உபேந்திர குஷ்வாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE