பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஜாமீனில் வெளிவந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆவேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்களை அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் சிங்கிடமிருந்து இதுவரையில் பணம் எதுவும் மீட்கப்படாத நிலையில், அவருக்கு கடந்த 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அதன் பிறகு கட்சித் தொண்டர்களை சந்தித்த அவர், “நம் கட்சியின் மூத்தத் தலைவர்களான அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின்ஆகியோர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள்.

நம் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்என்று பாஜக கோருகிறது. அவர் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டார். பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

சிறையிலிருந்து வெளிவந்த அவர், அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE