கடும் வ‌றட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க முடியாது: கர்நாடகா திட்டவட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு 3.5 டிஎம்சி நீரை வழங்க முடியாது என டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது த‌மிழக அரசின் தரப்பில், ‘கடந்த ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு பிப்ரவரி, மார்ச்மாதங்களில் 5 டிஎம்சி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடகா இதுவரை 1.5 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இன்னும் 3.5 டிஎம்சி திறந்துவிட உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. பெங்களூருவில் குடிநீருக்கு தட்டுப்பாடுநிலவுகிறது. எனவே, தமிழகத்துக்கு 3.5 டிஎம்சி நீர் திறக்க முடியாது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்தால், அதற்கேற்ப நீர் திறக்கப்படும்’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE