கேரளாவில் எஸ்டிபிஐ ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுப்பு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிக்க எஸ்டிபிஐ (SDPI) முன்வந்த நிலையில், அந்த ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, நேற்று (புதன்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் அரசியல் முகமான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. தோல்வி பயத்தால் வகுப்புவாத அமைப்பான எஸ்டிபிஐ-ன் ஆதரவை நாடும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியை தள்ளி இருப்பதாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியது. இதேபோல், பாஜகவும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தது.

இதனால், எஸ்டிபிஐ-ன் ஆதரவை ஏற்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட காங்கிரஸ், எஸ்டிபிஐ-ன் ஆதரவை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் எம்எம் ஹசன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர், “வகுப்புவாத அமைப்பான எஸ்டிபிஐ ஆதரவை நாங்கள் நிராகரிக்கிறோம். பெரும்பான்மை வகுப்புவாதம், சிறுபான்மை வகுப்புவாதம் இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.

குடிமக்கள் தனிப்பட்ட முறையில் வாக்களிக்கிறார்கள். எங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அவர்களின் ஆதரவைப் பெறுவோம் என நம்புகிறோம்” என தெரிவித்தனர்.

இதனிடையே, தங்கள் அமைப்பை வகுப்புவாத அமைப்பாக சித்தரிப்பதா என எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் அஷ்ரப் மௌலவி தெரிவித்துள்ளார். “இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எஸ்டிபிஐ. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை இது கொண்டுள்ளது.

கேரளாவைத் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் குறிப்பிட்ட குழுவின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்று கூற முடியாது" என்று கூறினார்.

எஸ்டிபிஐ ஆதரவை ஏற்பதற்கு காங்கிரஸின் கூட்டணியில் உள்ள ஐயுஎம்எல் (IUML) கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எஸ்டிபிஐ ஆதரவை ஏற்றால் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆதரவை இழக்க நேரிடும் என்று அக்கட்சி கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு, இஸ்லாத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி ஒரு கல்லூரி ஆசிரியர் மீது பிஎஃப்ஐ (PFI) கடுமையான தாக்குதலை நிகழ்த்தியது. இது கேரளா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE