இண்டியா கூட்டணியில் தொகுதி இல்லை: காஷ்மீரில் தனித்து நிற்கிறது பிடிபி

By செய்திப்பிரிவு

இண்டியா கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால், காஷ்மீரில் தனித்து போட்டியிடப் போவதாக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின.

இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி.), மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சில மாநிலங்களில் இக்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது.

இதுபோல ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 2 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என என்.சி. அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிடிபிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

எனவே, இந்த பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதியிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். இந்த முடிவை எடுத்ததற்கு தேசிய மாநாட்டு கட்சியே காரணம். அதேபோல, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 2 தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE