மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணம் வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.37,907 கோடி கோரிய நிலையில், இதுவரை எந்த நிதியும் வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக உடனே ரூ.2,000 கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும், அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, மிக்ஜாம் புயல், வெள்ளபாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.19,692.69 கோடி வழங்குமாறு டிசம்பர் 14-ம் தேதியும், தென் மாவட்ட பெருமழை, வெள்ள நிவாரண நிதியாக ரூ.18,214.52 கோடி வழங்குமாறு டிசம்பர் 26-ம் தேதியும் தமிழக முதல்வர் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

ஆனால், தமிழக அரசு கோரிய நிவாரண நிதியில் மத்திய அரசு இதுவரை ஒரு பைசாகூட வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று வேலூரில் நேற்று முன்தினம் நடந்தபிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், வெள்ள நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர்சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் டி.குமணன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான மத்திய குழு பார்வையிட்டது. தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. பிறகு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழகம் வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, இடைக்கால நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

டெல்லியில் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி சந்தித்து, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குமாறு வலியுறுத்தினார். இரட்டை பேரழிவுகளுக்கான நிவாரணநிதியாக ரூ.37,907.21 கோடி வழங்க கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், தேசிய பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை எந்த நிதியும் வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 14, 21-வதுபிரிவுகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது. வெள்ள சேதத்தால் மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்துள்ள 15-வது நிதி ஆணையம், கடுமையான இயற்கை பேரழிவு ஏற்பட்டால் கூடுதல் நிதி உதவி வழங்க வழிவகை செய்துள்ளது. எனவே,போதிய வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி, தேவையான அனைத்து நடைமுறைகளையும் மாநில அரசு நிறைவேற்றும்போது இழப்பீடு, நிவாரணம் வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்த முடியாது.

உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். முதல்கட்டமாக ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனே வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்